தென்னையை பாதுகாக்க முன்னெச்சரிக்கை: தோட்டக்கலைத்துறை அட்வைஸ்
ஆனைமலை: 'வடகிழக்கு பருவமழை காலங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றி தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும்,' என, ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் அறிக்கை: வடகிழக்கு பருவமழை பொதுவாக அக். மாதம் இரண்டாம் பாதியில் துவங்கி டிச. வரை நீடிக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் கனமழை, புயல் ஆகியவற்றால் தென்னை மரங்களில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். அதிவேக புயல் எச்சரிக்கை விடுக்கப்படும் காலங்களில், புயலுக்கு முன் தேங்காய், இளநீரை அறுவடை செய்தல் வாயிலாக மரத்தின் பாரத்தினை குறைத்து மரங்கள் வேரோடு விழுவதை தவிர்க்கலாம். மரத்தின் கீழ் சுற்றில் உள்ள கனமான, பழைய ஓலைகளை வெட்டி அகற்றுவது வாயிலாக மரத்தின் தலைப்பகுதியில் உள்ள சுமையை குறைத்து மரம் முறிவதை தவிர்க்கலாம். மரத்தின் அடிப்பகுதியை சுற்றி மண் அணைத்தல் வாயிலாக வேர் பகுதியை பாதுகாத்திடலாம். நீர் தேக்கம் ஏற்படாமலும் தடுக்கலாம்.முறையான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆழமாக உழவு செய்தலை தவிர்க்க வேண்டும். ஆழமாக உழவு செய்வதால், வேர்கள் பாதித்து வேர் அழுகல் நோய் பாதிப்பு ஏற்படும். தண்டு பகுதியில் அதிக ஈரப்பதம் காரணமாக பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை தடுக்க சுண்ணாம்பு அடித்தல் வேண்டும். மரத்தின் கொண்டை பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் முதலியவற்றை தேங்காய் அறுவடை காலத்திலேயே தொடர்ந்து அப்புறப்படுத்த வேண்டும். மானாவாரி தோப்புகளில் அங்கங்கு சிறு குழிகள் வெட்டி, கிடைக்கப்பெறும் நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்கலாம். அதிக காற்று வீசும் நேரத்தில் மரம் ஏறுவதை தவிர்க்க வேண்டும். தற்காலிகமாக நீர் மற்றும் ரசாயன உரமிடுவதை தவிர்த்து இயற்கை உரங்களை இடலாம். ஈரப்பதத்தில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மரங்களுக்கு காப்பீடு செய்தல் மிக அவசியமாகும். இவ்வாறு, கூறினார்.