உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்; தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்கள்; தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்

சூலூர்: தென்னையை தாக்கும் கருந்தலை புழுக்களை, ஒட்டுண்ணிகள் விடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம், என, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சூலூர் வட்டார கிராமங்களில், கருந்தலை புழுக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவது பரவலாக உள்ளது. பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு, கருத்தலை புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறியதாவது: கருந்தலை புழுக்களை தென்னை இலைகளின் அடிப்பாகத்தில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்டு, மகசூல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இலையின் அடிப்பகுதியில் புழுக்கள், கூண்டு புழுக்கள் நூலாம்படையுடன் இருப்பது முக்கிய அறிகுறியாகும். அதுபோன்று இருக்கும் இலைகளை, மரத்தில் இருந்து, மூன்று அடி விட்டு வெட்டி, எரித்து விடவேண்டும். இரவு, 7:00 முதல், 11:00 மணி வரை, ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைத்து, அந்து பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம். பிரக்கானிட் ஒட்டுண்ணிகளை, ஏக்கருக்கு, 21 எண்ணிக்கையில், 21 நாட்கள் இடைவெளியில், மூன்று அல்லது நான்கு முறை விடவேண்டும். குறைந்த உயரம் உள்ள மரங்களில் கீழ் பகுதியிலும், உயரமான மரங்களின் மேல் பகுதியிலும் ஒட்டுண்ணிகளை விட்டு புழுக்களை கட்டுப்படுத்தலாம். ஆழியாறில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், 75 ரூபாய்க்கு ஒட்டுண்ணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ