| ADDED : ஜன 02, 2026 05:04 AM
கோவை: மாநகராட்சி வடக்கு மண்டலம், 28வது வார்டு துப்புரவு பணியாளர்கள், குப்பை சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தினரிடம் புகார் மனு அளித்தனர். 'ஆவாரம்பாளையம் பகுதிகளில் தரம் பிரிக்காமல் வீசப்படும் குப்பையில் மருத்துவ கழிவுகள், மனித கழிவுகள் என தொடவே பயமுறுத்தும் விஷயங்கள் உள்ளன. பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கைகளால் இந்த குப்பைகளை பிரிக்க சொல்கின்றனர் அதிகாரிகள். அதை தரம் பிரித்தால் எங்களுக்கு மன சோர்வும் உடல் சோர்வும் ஏற்படுகிறது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால், ஞாயிற்றுக்கிழமை சம்பளத்தையும் சேர்த்து இரு நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்கின்றனர். எனவே, குப்பையை தரம் பிரித்து அகற்றுவதற்கு மாற்று வழி செய்தும், விடுப்பு எடுக்கும் நாட்களுக்கு மட்டும் சம்பளத்தை பிடித்தம் செய்யவும் கேட்டுக்கொள்கிறோம்' என, மனுவில் தெரிவித்துள்ளனர்.