-நமது சிறப்பு நிருபர்-கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் பர்மிட்டை ரத்து செய்ய வேண்டுமென்று, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு, ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், மாவட்ட போக்குவரத்து அதிகாரியான கலெக்டர் அல்லது போக்குவரத்துத் துறை கமிஷனரால் தான், பஸ் பர்மிட் வழங்கப்படுகிறது; கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தைத்தான் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வசூலிக்க வேண்டும். ஆனால் அரசு பஸ், தனியார் பஸ், டவுன்பஸ், ரூட் பஸ் என்று விதிவிலக்கின்றி, கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதுகுறித்து, பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தாலும், ஆர்.டி.ஓ.,க்களால் கண் துடைப்பு நடவடிக்கையே எடுக்கப்படுகிறது. உதாரணமாக, கோவை மாவட்டத்தில் மட்டும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், 1701 அரசு பஸ்கள், 724 தனியார் பஸ்களுக்கு, கூடுதல் கட்டணம் வசூலித்ததற்காக, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.9 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சமீபமாக, தனியார் பஸ்களுக்கு 3 ஆயிரம் ரூபாய், அரசு பஸ்களுக்கு வெறும் 100 ரூபாய், அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதம் மிகச்சிறிய தொகையாக இருப்பதால், எந்த அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் இதைப் பற்றி கவலையே இல்லாமல், மீண்டும் அதிகக் கட்டணத்தை வாங்கிக் கொண்டிருக்கின்றன. தண்டனையை கடுமையாவதே இதற்கு ஒரே தீர்வு.இதை வலியுறுத்தியே, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, கடந்த 2019ல் பொது நல மனு (W.P 31514 /2019) தாக்கல் செய்தது. மனுவை விசாரித்து வந்த ஐகோர்ட் முதல் அமர்வு, முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களுக்கான அபராதத் தொகையை, ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், இதில் சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டு, அபராதம் மட்டுமே இதற்கு தீர்வாகாது என்றும் கூறியுள்ளனர்.இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சுட்டிக் காட்டியுள்ள நீதிபதிகள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது என்பது, தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர். மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 86(1) ன் படி, இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளனர்.ஐகோர்ட் குறிப்பிட்டுள்ள பிரிவின்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பஸ்களின் பர்மிட்டை 'சஸ்பெண்ட்' செய்யவும் முடியும்; ரத்து செய்யவும் முடியும். இந்த அதிரடி உத்தரவுக்குப் பின்பாவது, போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மாவட்ட கலெக்டரும் இணைந்து, இந்த கூடுதல் கட்டண முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.