உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் நகராட்சியில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் கடும் வாக்குவாதம் அழுது கொண்டே வெளியேறிய பெண் கமிஷனர்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் கடும் வாக்குவாதம் அழுது கொண்டே வெளியேறிய பெண் கமிஷனர்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதாவிடம், நகராட்சியின் 20 மற்றும் 30 வது வார்டுகளில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் வசதிகள் போன்றவைகளை ஏற்படுத்தி தர மனு அளித்தார். இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அதற்கு எம்.எல்.ஏ., விருப்ப நிதி தருவதற்காக, மதிப்பீடுகளை பெறவும், எம்.எல்.ஏ., செல்வராஜ், நேற்று நகராட்சி கமிஷனரை சந்திக்க வந்தார்.

வாக்குவாதம்

ஏற்கனவே முன் அனுமதி பெறப்பட்ட நிலையில், கமிஷனரை அவரது அறையில் எம்.எல்.ஏ., சந்தித்து பேசினார். அவருடன் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிலரும் இருந்தனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., மனுக்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆவணங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலக ஊழியரிடம் எடுத்து வர கமிஷனர் அமுதா சொன்னார்.அப்போது தி.மு.க.வை சேர்ந்த நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வீன், துணை தலைவர் அருள்வடிவு மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் கமிஷனர் அறைக்குள் வந்தனர்.உடனே, எம்.எல்.ஏ., செல்வராஜ், நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், எதற்காக நகராட்சி தலைவரும், துணை தலைவரும் உள்ளே வர வேண்டும் என கமிஷனரிடம் கேட்டார். இதையடுத்து, அந்த அறைக்குள் இருந்த தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அறைக்கு வெளியே நின்றிருந்த தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சியினரும் கமிஷனர் அறைக்குள் சென்றனர்.அப்போது எம்.எல்.ஏ., செல்வராஜ், நகராட்சி கமிஷனரை பார்த்து 'நான் உங்களிடம் அனுமதி பெற்று தான் வந்தேன். ஒரு எம்.எல்.ஏ., நகராட்சி கமிஷனரை சந்திக்கக்கூடாதா?, நாம் பேசிக்கொண்டிருக்கையில் எதற்காக நகராட்சி தலைவர், துணை தலைவரை அறைக்குள் அனுமதித்தீர்கள்' என கனத்த குரலில் கேட்டார்.

வெளியேறினார்

இதை கேட்ட கமிஷனர் அமுதா, திடீரென அழுதார். கண்ணீரை துடைத்தவாறு இருந்தார். இதை தி.மு.க.,வினர் பார்த்ததும், கமிஷனரை ஏன் அழ வைக்கிறீர்கள் என கேட்டு எம்.எல்.ஏ., விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், கமிஷனர் அமுதா அழுது கொண்டே அறையிலிருந்து வெளியேறினார். இந்த சத்தம் கேட்டு வெளியில் நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து சமாதானம் செய்தனர். ஆனாலும் இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசம் அடையவே மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் சமாதானம் செய்தார். மேலும் நகராட்சி அலுவலகத்தில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.பின், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 30 வது வார்டுக்குட்பட்ட சாந்திநகரில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கான மதிப்பீட்டை பெற தொலைப்பேசியில் கமிஷனருக்கும், பொறியாளருக்கும் தொடர்பு கொண்டும் சரியான பதில் இல்லை. கமிஷனர் பின்னர் பேசுகிறேன் என பலமுறை சொல்லியதன் காரணமாக, நேரடியாக கமிஷனரை சந்தித்து பேசினேன். அப்போது தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவரும், துணை தலைவரும் உள்ளே வந்து நீங்கள் இதையெல்லாம் கேட்க கூடாது, ஏன் உள்ளே இருக்கிறீர்கள் என கேட்டனர். அதை தொடர்ந்து தான் வாக்குவாதம் நடந்தது. மக்கள் பிரதிநிதிதியாக உள்ள நான், மக்கள் பிரச்னைக்காக நகராட்சி கமிஷனரை சந்திக்க வருவதில் எந்த தப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.பின், நகராட்சி கமிஷனர், எம்.எல்.ஏ., உடன் பேச்சுவார்த்தை நடத்த, மீண்டும் அறைக்கு வந்தார். அவருடன் நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோரும் வந்தனர். இதை அடுத்து வாக்குவாதம் முடிவுக்கு வந்து சுமூகமான நிலை ஏற்பட்டது.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை