உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காணும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில்... உற்சாகம் பொங்கியது! கிராமத்தில் பூப்பறிக்கும் நோம்பு கோலாகலம்

காணும் பொங்கல் விழா கொண்டாட்டத்தில்... உற்சாகம் பொங்கியது! கிராமத்தில் பூப்பறிக்கும் நோம்பு கோலாகலம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில், காணும் பொங்கல் பண்டிகையை, பூப்பொங்கல் விழாவாக பாரம்பரியமாக கொண்டாடி மக்கள் மகிழ்ந்தனர். கிராமங்களில் சிறுவர், சிறுமியர் மேள, தாளத்துடன் சென்று பூப்பறிக்கும் இந்நோம்பில் குதுாகலம் அடைந்தனர்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. போகியை தொடர்ந்து, தை முதல் நாளில், சூரிய பகவானுக்கும், குல தெய்வத்துக்கும், பொங்கலிட்டு மக்கள் வழிபட்டனர்.இரண்டாம் நாளில், விவசாய நிலங்களில் 'பட்டி' அமைத்து, மாட்டுப்பொங்கல் விழா பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. பண்டிகையின் மூன்றாவது நாளான நேற்று, காணும் பொங்கலை, பூப்பொங்கல் விழாவாக கொண்டாடினர்.இதையொட்டி, நேற்று, பெரும்பாலான தனியார் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும், காணும் பொங்கல் கொண்டாடினர்.இதற்காக, நகர், கிராமப்பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பலரும், காலை முதலே கார், பஸ், இருசக்கர வாகனங்களில், ஆழியாறு அணைக்கு படையெடுத்தனர்.ஆழியாறு பூங்காவில் அமைந்துள்ள விளையாட்டு உபகரணங்களில், சிறுவர், சிறுமியர் விளையாடி மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். மேற்குத் தொடர்ச்சி மலை, அணையின் நீர்ப்பரப்பு அழகினை பலரும் கண்டு வியந்தனர்.சிலர் வீடுகளில் இருந்து மதிய உணவு எடுத்து வந்து, பூங்கா, ஆற்றோரம் வாகனங்களை நிறுத்தி, குடும்பத்தினருடன் உணவு உட்கொண்டனர். ரோட்டோர ஓட்டல்களிலும் அதிகளவு கூட்டம் காணப்பட்டது.ஆழியாறு அணைக்கு வந்த சிலர், வால்பாறை நோக்கி பயணித்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து அதிகரித்தது.

மக்கள் மகிழ்ச்சி

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, பூப்பொங்கல் விழா கிராமங்களில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் சாணப்பிள்ளையார் வைத்து வழிபட்ட சிறுமியர், பூப்பொங்கல் நாளில் அவற்றை ஆற்றில் விசர்ஜனம் செய்ய ஆயத்தமாயினர்.கிராமத்தில் அனைவரும் ஒன்று திரண்டதும், மேள, தாளம் முழங்க நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக சென்று, சாணப்பிள்ளையாரை விசர்ஜனம் செய்து வழிபட்டனர்.திருமணமான பெண்களுக்கு பெற்றோர் வீட்டில் இருந்து வழங்கிய பொங்கல் பொருட்களை கொண்டு, சிறுமியருக்கு பூப்பொங்கல் வைத்தனர். இதனால், பூப்பொங்கல் விழா களைகட்டியது.

அலைமோதிய கூட்டம்

ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை முடிந்து, வழக்கபோல இன்று முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்படும் என்பதால், மாலையில் அவரவர் ஊர்களுக்கு செல்ல முற்பட்டனர்.இதனால், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி நோக்கி செல்லும் வழித்தட பஸ்களில் பயணியர் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.மேலும், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி வரும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை