| ADDED : ஜன 21, 2024 11:26 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடக்கிறது. அதில், நேற்றுமுன்தினம், கோவை - பொள்ளாச்சி ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களிடம், துண்டுப்பிரசுரங்களை வழங்கி, ெஹல்மெட் அணிவதன் அவசியம், லைசென்ஸ் எடுப்பது உள்ளிட்ட சாலை விதிமுறைகளை விளக்கினர்.அதிகாரிகள் கூறியதாவது: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா பிப்., 14ம் தேதி வரை நடக்கிறது. விழிப்புணர்வு பேரணி, பள்ளி, கல்லுாரி, சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி எடுத்தல், கருத்தரங்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மாதிரி பூங்கா அல்லது முக்கிய பகுதிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.ஏர் ஹாரன், பலகுரல் ஹாரன் மற்றும் சைலன்சர்களை மாற்றியமைத்து இருப்பது குறித்து தணிக்கை மேற்காள்ளப்படுகிறது. தினமும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தி சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.