இடைவிடாமல் பெய்யும் பருவமழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை,; வால்பாறையில் இடைவிடாமல் பெய்யும் கனமழையால், பொள்ளாச்சி ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையில் கடந்தஒரு வாரமாக தென்மேற்குப் பருவமழை இடைவிடாமல் பெய்கிறது. பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், பொள்ளாச்சி ரோட்டில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதே போல், எஸ்டேட் பகுதியில் கனமழைக்கு, சக்தி - தலநார் எஸ்டேட் ரோட்டில் மண் சரிந்தும், மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், ஏழு நாட்களாக இந்த எஸ்டேட் தொழிலாளர்கள் இருளில் தவிக்கின்றனர்.தொடர் மழையால், வால்பாறை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாபயணியர் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில், 12 அடி உயர்ந்து, 71.71 அடியாக இருந்தது. பரம்பிக்குளம், ஆழியாறு, அமராவதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.முன்கூட்டியே துவங்கியுள்ள பருவமழையால், அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோன்று, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சமவெளிப்பகுதியில் நீராதாரங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பாசன கிணறுகள், ஊராட்சி பொதுக்கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு:சோலையாறு - 87, பரம்பிக்குளம் - 52, ஆழியாறு - 19, வால்பாறை - 76, மேல்நீராறு - 119, கீழ்நீராறு - 90, காடம்பாறை - 15, மேல்ஆழியாறு - 10, சர்க்கார்பதி - 31 மணக்கடவு - 77, துாணக்கடவு - 52, பெருவாரிப்பள்ளம் - 50, நவமலை - 14, பொள்ளாச்சி - 113 என்ற அளவில் மழை பெய்தது.