| ADDED : பிப் 10, 2024 12:46 AM
பேரூர்;பேரூர் தமிழ்க் கல்லுாரியில், 'சிந்து முதல் பொருநை வரை' என்ற, மாநில அளவிலான கருத்தரங்கம், நேற்று நடந்தது. முன்னதாக, தமிழ் துறை மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில், தொல்லியல் அகழாய்வு குறித்த கண்காட்சி நடந்தது. கருத்தரங்கில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் அருளுரை வழங்கி பேசுகையில், ''நொய்யல் நதிக்கரையிலும், சிந்துசமவெளியை போன்று அகழாய்வினை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பில் பணியாற்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா தன் சிறப்புரையில், ''ஆய்வுகளின் அடிப்படையில் வரலாறுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்,'' என்றார்.ஒடிசா அரசின் முதன்மை ஆலோசகர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே. ஆதிச்சநல்லுார், கொற்கை, கீழடி ஆகிய இடங்களில் நடந்த அகழாய்வுகளுடன், அவை பொருந்தி உள்ளது. வரலாறு பாதுகாப்பாக உள்ளது. அதை தொடர்ந்து பாதுகாப்பாக வைத்திருப்போம்,'' என்றார்.கருத்தரங்கில், வரலாற்று பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கருணானந்தன், புரவலர் ராமகிருட்டிணன் மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.