| ADDED : ஜன 06, 2024 12:29 AM
வால்பாறை;வால்பாறையில், துவக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை அடுத்துள்ளது அய்யர்பாடி ரோப்வே. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 17 மாணவர்கள் படிக்கின்றனர். வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. குறிப்பாக, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் இங்கு நடமாடுகின்றன.இந்தப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.பெற்றோர்கள் கூறுகையில், 'அய்யர்பாடி ரோப்வே பகுதியில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில், எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வரும் யானைகள், அங்குள்ள ரேஷன் கடை, பள்ளி சத்துணவு மையத்தை இடித்து சேதப்படுத்துகிறது.இதனால், பள்ளிக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.