ஆனைமலை:'ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, மேலாண்மை முறைகளை கடைபிடித்து, தென்னை மரங்களில் நோய்பரவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,' என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் தெரிவித்தனர்.தென்னையில் தேவையில்லாத களை, பூச்சி மற்றும் பூஞ்சாணக்கொல்லி மருந்துகளை உபயோகித்தல், பருவகாலநிலை மாற்றம் மற்றும் மண்ணில் சத்துகள் குறைதல் போன்ற சூழ்நிலையில் நோய்த்தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது.இந்த நோய்களில் இருந்து தென்னையை காக்க,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுரேஷ், பயிர் நோயியல் துறை இணை பேராசிரியர் லதா ஆகியோர் கூறியதாவது:அடித்தண்டழுகல் நோயால் பாதிக்கப்பட்ட மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து, மூன்றடி உயரத்தில் சாறு வடியும். சாறுவடிந்த மரத்தின் தண்டுப்பகுதியை வெட்டிப்பார்த்தால் தண்டுப்பகுதியானது அழுகி நிறம் மாறி காணப்படும்.இதை கட்டுப்படுத்த மரத்தை சுற்றி வட்டப்பாத்திகள் அமைத்து, தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும். நோயுற்ற மற்றும் அதை சுற்றியுள்ள மரம் ஒவ்வொன்றுக்கும் ஒரு சத போர்டோ கலவையை, 40 லிட்டர் அளவில், மரத்தை சுற்றி, 18 மீட்டர் வட்டப்பாத்தியில் ஊற்ற வேண்டும்.இலைக்கருகல் நோய் பாதிக்கப்பட்ட இலையின் நுனிப்பகுதி கருகி, ஓரங்கள் சுருங்கி, கீழ் நோக்கி வளைந்து காணப்படும். கருகலானது மேல் நோக்கி பரவி இலையின் பெரும்பரப்பை ஆக்கிரமிப்பு செய்வதால் இலையானது கருகி மற்றும் காய்ந்தது போல் காணப்படும். இது வெயில் காலங்களில் அதிகமாக காணப்படும்.தகுந்த காலநிலை வரும் போது காற்றின் வாயிலாக ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்துக்கு பரவுகின்றது. இதற்கான மேலாண்மை முறைகள் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களுடன் ஆண்டுக்கு, 1.5 கிலோ பொட்டாஷ் அதிகமாக ( அதாவது ஆண்டுக்கு, மரத்துக்கு, 3.5 கிலோ) இடவேண்டும்.இலை அழுகல் நோய், பொதுவாக வேர்வாடல் நோயுடன் சேர்ந்தே காணப்படும். வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரம் பலவீனமடைந்து காணப்படுவதால், பல பூசணங்கள் தாக்குதலுக்கு உட்படுவதால் இலை அழுகல் நோய் ஏற்படுகிறது.இந்நோயை கட்டுப்படுத்த, இரண்டு மி.லி., ஹெக்சகோனசோல் மருந்தை, 30 மி.லி., தண்ணீரில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.வேர் வாடல் நோய் என்பது பைட்டோபிளாஸ்மா என்னும் நுண்ணுயிரினால் ஏற்படுகிறது. எவ்வித காரணமுமின்றி அதிகமாக குரும்பை உதிர்தல் இதன் முதல் அறிகுறியாகும்.தென்னை மரத்தில் உள்ள மட்டைகளின் இலைகளின் மஞ்சள் நிறமாக மாறி இலைமடல்களின் ஓரங்கள் சுருங்கி கீழ் நோக்கி வளைந்து காணப்படும்.இது மனிதனின் விலா எலும்பு போல காட்சியளிக்கும். இலைமடல்களின் கருகிய பகுதிகள் அதிகமான காற்று அல்லது மழையின் போது மரத்தில் இருந்து உதிர்ந்து விடுவதால் குச்சிகள் மட்டும் நீட்டிக்கொண்டு இருக்கும். இந்நோய் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை கடைபிடிக்க வேண்டும்.இந்நோய் பிற மரங்களுக்கு பரவாமல் இருக்க அதிக நோயுற்ற மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.