| ADDED : ஜன 31, 2024 02:10 AM
ஏரிகள் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசிடம் 120 கோடி ரூபாயை, நீர்வளத்துறை கேட்டுள்ளது.நாடு முழுதும் நீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில், ஏரிகளை புனரமைக்கும் திட்டத்தை, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நபார்டு வங்கி கடனுதவி பெற்று, ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதனால், மத்திய அரசு திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைக்கும் திட்டம் ஒப்புக்கு செயல்படுத்தப்பட்டது. தற்போது வரை ஒன்பது கட்டமாக, இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. குடிமராமத்து திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, இத்திட்டத்தை தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. மத்திய அரசு நிதியில், ஏரிகளை புனரமைக்கும் திட்டம் தொடர்கிறது.வடகிழக்கு பருவமழை ஓய்ந்துள்ள நிலையில், மழையால் சேதமடைந்த மற்றும் நீர் பற்றாக்குறை நிலவும் ஏரிகளை இத்திட்டத்தின் கீழ், 10வது கட்டமாக புனரமைக்க நீர்வளத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக, மத்திய அரசிடம் 120 கோடி ரூபாய் கேட்கப்பட்டு உள்ளது.மாநில அரசு 80 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யவுள்ளது. மொத்தம் 200 கோடி ரூபாய் செலவில், 300க்கும் மேற்பட்ட ஏரிகள், இத்திட்டத்தின் வாயிலாக புனரமைக்கப்படும். ஏற்கனவே, இத்திட்டத்தின் மேற்கொண்ட பணிகளுக்கு, 40 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது.இந்த நிலுவை தொகையும் சேர்த்து வழங்கும்படி நீர்வளத்துறை வாயிலாக, மத்திய ஜல்சக்தி துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பின், இத்திட்டத்திற்கு நிதி உறுதி செய்யப்படும் என ஜல்சக்தி துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.