ஈஷா கிராமோத்சவ மண்டல விளையாட்டு
கோவை; கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், ஈஷா கிராமோத்சவ மண்டல அளவிலான போட்டி நடந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய ஆறு மாநிலங்களில், முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் நிறைவடைந்தன. நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட மண்டல அளவிலான போட்டிகள் நடந்தன. தமிழகத்தில், கோவை, சேலம், வேலுார், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த போட்டிகளில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து கிளஸ்டர் அளவில், தேர்வான அணிகள் பங்கேற்றன. செல்வம் ஏஜென்சி நிறுவனர் நந்தகுமார், கொங்குநாடு கல்வி குழும செயலாளர் வாசுகி ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். மண்டல அளவிலான த்ரோபால் போட்டியில், பி.ஜி.புதுார் அணி முதலிடம், தேவராயபுரம் அணி இரண்டாமிடம் பெற்றது. வாலிபால் போட்டியில், மத்வராயபுரம் அணி முதலிடம், நஞ்சுண்டாபுரம் அணி இரண்டாமிடம் பெற்றது. முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆறு மாநிலங்களில் இருந்து, இரண்டாம் கட்ட போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி, வரும் 21ல் ஈஷாவில் உள்ள, ஆதியோகி வளாகத்தில் நடக்கிறது.