உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ஐ.டி., நிறுவனம் மூடல்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி

கோவையில் ஐ.டி., நிறுவனம் மூடல்; ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி

கோவை : கோவையில் முன் அறிவிப்பின்றி, ஐ.டி., நிறுவனம் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மூடப்பட்டதால், பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்டனர்.கோவை ஆர்.எஸ்.புரம் - தடாகம் சாலையில் இயங்கி வந்த, 'போக்கஸ் எஜுமேட்டிக் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தில், 2017 முதல், கோவை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த, 3,000த்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்து வந்தனர்.இந்த நிறுவனத்துக்கு, கோவை - திருச்சி சாலையிலும், ஆர்.எஸ்.புரத்திலும் அலுவலகம் உள்ளது. இவர்களது பணி, அமெரிக்காவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிப்பது.திடீரென இந்த நிறுவனம் மூடப்படுகிறது; யாரும் பணிக்கு வர வேண்டாம் என நேற்று மின்னஞ்சல் வாயிலாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் ஜன., 26 வரை பணி புரிந்ததற்கான ஊதியமும் வழங்கப்படவில்லை என, கூறப்படுகிறது.அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கலெக்டரிடம் புகார் அளிக்க, அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.ஊழியர் கார்த்திக்ராஜா கூறுகையில், ''அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட நிறுவனம் என்பதால், வேலைக்கு பாதிப்பு இருக்காது என்று நம்பி பணிபுரிந்து வந்தேன். இப்படி ஆகும் என எதிர்பார்க்கவில்லை,'' என்றார்.ஊழியர் சேதுபதி ராஜேந்திரன் கூறுகையில், ''தொழிலாளர்களுக்கான அனைத்து சலுகைகளும் எங்களுக்கு வழங்கப்பட்டன. பணி நெருக்கடி ஏதுமின்றி பணிபுரிந்தோம். திடீர் மூடல் உத்தரவை ஜீரணிக்க முடியவில்லை,'' என்றார். பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை