உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமி பலாத்கார கொலை வழக்கு தீர்ப்பு வரும் 27க்கு தள்ளிவைப்பு

சிறுமி பலாத்கார கொலை வழக்கு தீர்ப்பு வரும் 27க்கு தள்ளிவைப்பு

கோவை: சூலுார் அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி வரும் 27 க்கு ஒத்திவைக்கப்பட்டது. சூலுார் அருகே 10 வயது சிறுமி, மே 21ம் தேதி காணாமல் போனார். கண்ணாம்பாளையம் குளம் அருகே சடலமாக கிடந்தார். தனிப்படை விசாரணையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி,33 என்பவர் சிறுமியை பைக்கில் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்றதும், தஞ்சாவூரை சேர்ந்த அவரது நண்பர் மோகன், 31 உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடந்தது. பரபரப்பான இந்த வழக்கில் 16ம் தேதி(நேற்று) தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி, திருச்சி சிறையிலிருந்த மோகன் ஆகியார் நேற்று காலை போக்சோ கோர்ட்டில் தனித்தனியாக ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஹரிகரன், தீர்ப்பு அளிக்கப்படுவதை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மோகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வெளியே அழைத்து வரப்பட்ட போது, போலீசார் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறினார். இருவரும் பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு வக்கீல் கே.ஆர்.சங்கரன் கூறுகையில், ‘‘சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 20 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. தீர்ப்பு வரும் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி