கோவை மாவட்டம் காரமடை, முன்னொரு காலத்தில், ஆறை நன்னாடு என வழங்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் காரை மரங்கள் அதிக அளவில் வளர்ந்தும், நீர் ஓடிக்கொண்டிருக்கும் மடைகள் நிறைந்திருந்தன. அதனால் இந்த நகருக்கு, 'காரைமடை' என பெயர் பெற்றது. இப்பகுதியில் வசிப்பவர்கள், பசு மாடுகளை அதிக அளவில் வளர்த்து, அதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை கொண்டு, வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்த பசு மாடுகளில் 'காராம் பசு' ஒன்று, தினமும் ஒரு புதர் மீது, மடியில் இருந்து பாலை பெய்து திரும்பி உள்ளது. இதை அறியாத தொட்டியன், பசு மாட்டின் மடியில் பால் இன்றி திரும்பும் காரணத்தை, அறிய முற்பட்டான். ஒருநாள் இந்த பசுவை, பின்தொடர்ந்து செல்லும்போது, பசு பாலை தானாகவே, புதர் மீது சுரந்ததைக் கண்டு, ஆவேசமாகி கொடுவாளை எடுத்து புதரை வெட்டியுள்ளான். அப்போது திருவரங்கன் எழுந்தருளி, தொட்டியனை ஆட்கொண்டார். பெருமாள் சேவையை கண்டு அவன் மயக்கம் அடைந்தான். மாடுகள் மட்டும் வந்த பின்னும், தொட்டியன் வராததை கண்ட, ஊரார், பட்டர் தலைமையில் தொட்டியனை தேடிச் சென்றனர். அப்போது அக்கூட்டத்தில், சாமியாடிய ஒருவருக்கு அரங்கநாதர் காட்சி கொடுத்துள்ளார். கூட்டத்தினர் தீப்பந்தங்களை கையில் ஏந்தி, தேன், பழம், கற்கண்டு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை கலந்து வைத்து, அரங்கனுக்கு படைத்து வழிபட்டுள்ளனர். அப்போது 'ரங்கா பராக் கோவிந்தா பராக்' (ரங்கன் வருகிறான், கோவிந்தன் வருகிறான்) என முள்ளங்கி ஆடி பாடியுள்ளனர். அரங்கநாத பெருமாள், சுயம்பு வடிவில் மூலவராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.