| ADDED : ஜன 19, 2024 11:26 PM
அன்னூர்:கரியாம்பாளையம் ஊராட்சியில், 40க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாததால் பல வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன.கரியாம்பாளையம் ஊராட்சியில், கரியாம்பாளையம், கிருஷ்ண கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளன.இதனால் இப்பகுதியில் மக்கள் இரவு நேரத்தில் வெளியே வர அஞ்சும் நிலை உள்ளது. விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தெருவிளக்குகள் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் பழுதான தெருவிளக்குகளை மாற்றி புதிய விளக்குகள் பொருத்தப்படவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஊராட்சி தலைவர் செல்வி வடிவேல் கூறுகையில், பழுதான தெருவிளக்குகளுக்கு பதில் வேறு விளக்குகள் பொருத்துவதற்கு தயார் நிலையில் உள்ளன. இதற்காக கரியாம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் தெருவிளக்கு பொருத்த மின் ஊழியர் அனுப்பவில்லை.இதுகுறித்து மாவட்ட அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் எரிவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. எனினும் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு வராததால் தெரு விளக்குகள் சரி செய்யப்படாமல் உள்ளன, என்றார்.