கோவை : காரமடை பேரூராட்சி செயல் அலுவலருக்கு எதிரான கவுன்சிலர்களின் போராட்டம் தீவிரமடைந்து, கவுன்சில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.காரமடை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சுப்பிரமணியன். இவர் இங்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து, இவருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையில் பனிப்போர் துவங்கியது; இப்போது, பகிரங்க மோதலாக வெடித்து, செயல் அலுவலரைக் கண்டித்து, மன்றக் கூட்டத்தையே ஒத்தி வைக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.பேரூராட்சி செயல் அலுவலர்கள் பலரும், வானளாவிய அதிகாரம் பெற்றவர்களாக தங்களை நினைத்துக் கொண்டு செயல்படுவது வழக்கம்தான். ஆனால், பெரும்பாலான பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே இவர்கள் செயல்பட்டு வருகின்றனர். காரமடை பேரூராட்சியிலும் இதே நிலைதான் இருந்தது.ஆனால், சுப்பிரமணியன் வந்தபின், மக்கள் பிரதிநிதிகள் ஒரு புறமும், பேரூராட்சி அலுவலர்கள் ஒரு புறமும் என இரு தரப்புக்கும் இடையில் அதிகார மோதல் வலுத்தது. இதன் எதிரொலியாக, செயல் அலுவலர் மீது எக்கச்சக்கமான புகார் மனுக்கள், உள்ளாட்சித்துறை அமைச்சர், லஞ்ச ஒழிப்புத்துறை என பல இடங்களுக்கும் பறந்தன.கடந்த மே மாதம் வரையிலான தொழில் வரி வசூல் தொடர்பாக, மன்றத்துக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார் என்பதுதான் செயல் அலுவலரின் மீதான முதல் புகார். பேரூராட்சி நிர்வாகங்களின் இயக்குனருக்கு இதே தவறான தகவலைக் கொடுத்துள்ளதாகவும், இத னால், பேரூராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணன்.அவர் கூறுகையில், ''தொழில் வரியினத்தில் மார்ச் 2011 வரை 8 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் நிலுவை இருப்பதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அத்தொகை வசூலிக்கப்படவே இல்லை; ஆனால், செயல் அலுவலர் அனுப்பிய அறிக்கையிலும் நிலுவை ஏதுமில்லை என்று கூறியுள்ளார். அப்படியானால் அந்த நிலுவை என்ன ஆனது?,'' என்றார்.அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டில் வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கியதோடு, வீட்டு வரியும் விதித்துக் கொடுத்து, அங்கீகாரமற்ற லே-அவுட்கள் அதிகரிக்க வழி வகுத்துள்ளார் என்பது செயல் அலுவலர் சுப்பிரமணி மீதான அடுத்த குற்றச்சாட்டு. இது தொடர்பாக, கலெக்டரின் மக்கள் குறை கேட்புக் கூட்டத்திலும் புகார் தரப்பட்டுள்ளது.காரமடை பேரூராட்சிக்குச் சொந்தமான திறந்தவெளிக் கிணறுகளுக்கு இரும்புச் சட்டங்களால் ஆன மூடி அமைப்பதில் முறையாக டெண்டர் விடாமல், தன்னிச்சையாக 'ஆர்டர்' வழங்கியதில் விதிமீறல் மற்றும் முறைகேடு செய்துள்ளார் என்பது மற்றொரு புகார். இதுபற்றியும் விலாவாரியாக புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.இவற்றைத்தவிர்த்து, தெரு விளக்குகளுக்கான உபகரணங்கள் வாங்கியதிலும், டிராக்டர் பழுது பார்ப்பதிலும் விதிமீறல் நடந்துள்ளது என்று செயல் அலுவலர் மீதான புகார்ப் பட்டியல் நீள்கிறது. முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமின்றி, தற்போதுள்ள தலைவர் மற்றும் கவுன்சிலர்களும் இவரது செயல்பாட்டில் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமையன்று பேரூராட்சி கவுன்சில் கூட்டத்தில், செயல் அலுவலர் மீதான புகார்கள் பற்றி விவாதிக்க தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கவுன்சிலர்கள் பலரும் முடிவு செய்திருந்தனர். ஆனால், அக்கூட்டத்துக்கு செயல் அலுவலர் வரவில்லை. இதனால், கோபமடைந்த தலைவர் உட்பட 11 கவுன்சிலர்கள், மன்றக் கூட்டத்தை ஒத்தி வைத்தனர்.நிறைவேற்றப்பட்ட ஒரே தீர்மானத்தில், 'சட்டத்துக்குப் புறம்பாக பேரூராட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளதால் அதற்கு விளக்கம் அளிக்க செயல் அலுவலர் வராததைக் கண்டித்து, அனைத்து பொருட்களும் கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டது,' என்று கூறியிருந்தனர். மொத்தமுள்ள 16 கவுன்சிலர்களில் 11 பேர், இதில் கையெழுத்திட்டுள்ளனர்.உள்ளாட்சித் தேர்தலுக்கு 2 மாதங்களே இருக்கும் நிலையில், இரு தரப்புக்குமிடையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மோதலால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த காரணத்துக்காகவோ நடைபெறும் இந்த காரசார மோதலை, விரைவாக முடிவுக்குக் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் காரமடை மக்களின் எதிர்பார்ப்பு.