| ADDED : செப் 26, 2011 10:45 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் எல்.எம். டபிள்யூ., பிரிவு அருகே உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு வரும் 'குடி' மகன்களால் அப்பகுதியில் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர்.கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் சாமையன் நகர், ஆனந்த நகர், டி.ஆர்.டி., நகர், ஜீவா நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களை தவிர, பழைய புதூர், புதுப்புதூர், ஆர்.வி.நகர்., உள்ளிட்ட பொதுமக்கள் சென்று வர 13 அடி அகல குறுகிய சாலையே உள்ளது. இச்சாலைக்கு வெகு அருகே 'டாஸ்மாக்' கடை உள்ளது. இங்கு மது அருந்த வரும் நபர்கள் வாகனத்தை ரோட்டின் இருபுறமும் நிறுத்துகின்றனர். போதை தலைக்கேறிய குடிமகன்கள் ஆபாசமான வார்த்தை பேசுகின்றனர். பொது மக்கள் நடக்கும் பாதையில் எச்சில் துப்பியும், வாந்தி எடுத்தும், சிறுநீர் கழித்தும் அசிங்கப்படுத்துகின்றனர்.இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:கடந்த 2005க்கு முன் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் இருந்த இந்த கடையை இரவோடு இரவாக இப்பகுதிக்கு மாற்றி விட்டனர். முதல்வர், சட்டப்பேரவை மனுக்கள் குழு, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அனைவரிடமும் மனு கொடுத்து ஓய்ந்து விட்டோம். டாஸ்மாக் கடையை மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர்.