| ADDED : செப் 26, 2011 10:45 PM
கோவை : 'அனைத்திற்கும் வனங்களை சார்ந்து வாழும் ஏழை மக்களின், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தினால், இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும்' என, இந்திய வன உயிரின நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஜான்சிங் தெரிவித்தார்.விலங்கினங்களுக்கு இயற்கை அமைத்து கொடுத்த பிரதான வாழிட வழிகளை அறுத்து, நமது சமூகம் வனங்களுக்குள் அமைத்துள்ள சாலைகளில் அடிபட்டு இறந்துபோகும் விலங்குகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா; வெளிநாடுகளிலிருந்து பரவிய உண்ண உதவாத செடிகள் நமது வனத்தின் பாதி இடத்தில் குடி கொண்டுள்ளன. இதனால் வன விலங்குகளுக்கு உணவுப்பஞ்சம் ஏற்படுகிறது. இவை ஒரு புறமிருக்க, வனங்களை சார்ந்து வாழும் மக்களும் வன அழிவுகளுக்கு வித்திடுகின்றனர். மனிதனின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையால் நகர்களில் இருந்த நீர்நிலைகள் கட்டடங்களாக மாறி வருகின்றன. சுயநலமாக மிருகங்களை வேட்டையாடுவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு மனித குலத்தின் அத்துமீறல்களே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.இது குறித்த விழிப்புணர்வை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், ஓசை அமைப்பு சார்பில் சூழல் சந்திப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு ஓட்டலில் நடந்து. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய வன உயிரின நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் (ஓய்வு) ஜான்சிங் கலந்து கொண்டார்.அவர் கூறியதாவது:நம் நாட்டில் வாகன விபத்துகளிலேயே அதிக வன விலங்குகள் உயிரிழக்கின்றன. குறிப்பாக ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதும், வனப்பகுதிகளுக்குள் ஊடாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் விலங்குகள் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாக உள்ளது. யானைகளுக்கு மோப்ப உணர்வு அதிகம். அருகில் குடியிருக்கும் மக்கள் தாம் உண்ட மிச்ச பொருட்களை திறந்த வெளிகளில் கொட்டி விடுகின்றனர். அவற்றை மோப்பம் கொள்ளும் யானை ரோட்டை கடந்து வர முற்படுகிறது. சில நேரங்களில் தண்ணீர் தேடியும் வந்து சிக்கி கொள்கின்றன.ரோட்டில் விலங்குகள் இறப்பதை தடுக்க வனப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளில் வேகத்தடைகளை அதிகமாக அமைக்க வேண்டும். நவீன யுக்திகள் மூலம் யானைகளை கண்காணித்து ரயில் ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கலாம்.நமது வனப்பகுதிகளில் பார்த்தீனியம், சப்பாத்தி கள்ளி, உருளி போன்ற உண்ணமுடியாத செடிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவை உள்ள இடங்களில் வன விலங்களுக்கு தேவையான புற்கள், செடி, கொடிகள் வளர்வதில்லை. இதனால், உயிரினங்களுக்கு தேவையான உணவுகள் சரிவிகிதமாக கிடைப்பதில்லை. இவற்றை அழிக்க வேண்டும்.இயற்கை நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது மிகமுக்கியமான ஒன்று. கோவையில் சிறுவாணி மற்றும் பில்லூர் தேக்கங்கள் பிரதான குடிநீர் வழங்கும் இடங்கள். அவற்றை பாதுகாப்பதுடன், இங்குள்ள குளங்களையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு, தற் போது அரசு ரூ.120 கோடி நிதி ஒதுக் கியுள்ளது. அதிகாரிகள் பணத்தை சரியான முறையில் செலவிட வேண்டும்.அனைத்திற்கும் வனங்களை சார்ந்து வாழும் ஏழை மக்கள், சுய தேவைகளுக்காக மரங்களை வெட்டுகின்றனர். விலங்குகள் உண்ணும் புற்களை வெட்டி பயன்படுத்துகின்றனர். இவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு முழு முயற்சிகளை செய்வதில்லை. வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே இதற்கு விடிவு கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.