உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனால் உயரட்டும் தெற்கு!இன்னும் தேவை கூடுதல் கவனிப்பு

போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனால் உயரட்டும் தெற்கு!இன்னும் தேவை கூடுதல் கவனிப்பு

கோவை;போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் போது, கோவையின் தெற்கு பகுதி வளர்ச்சி அடையும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், சேலம் கோட்டத்துக்குட்பட்ட எட்டு ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் கோவை போத்தனுார் மற்றும் வட கோவை ரயில்வே ஸ்டேஷன்களில், 50 சதவீத மறுசீரமைப்புகள் முடிவடைந்துள்ளன.லிப்ட், பயணிகளுக்கான காத்திருப்பு அறை, ஸ்டேஷனில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அகலமான மேம்பாலம், ரயில்வே ஸ்டேஷனின் பிரதான நுழைவாயில் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகள், அதிக வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. கோவையின் இரண்டாவது சந்திப்பாக, போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மாற உள்ளதால், இன்னும் கூடுதல் தேவைகளை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.இது குறித்து, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது:போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மிகவும் பழமையானது. இங்கு ரயில்வேக்கு சொந்தமான எஸ்.என்.டி., ரயில்வே ஒர்க் ஷாப், ரயில்வே மருத்துவமனை, ரயில்வே பயிற்சி மையம், ரயில்வே சிக்னல் பயிற்சி மையம், ரயில்வே பள்ளி, ரயில்வே இன்ஸ்டிடியூட், ரயில்வே பணிமையம், சிவில், இன்ஜினியரிங் அலுவலகங்கள், செயல்பட்டு வருகின்றன.தற்போது போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது சந்திப்பாக மாற்றப்படவுள்ளதால், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில், கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.இருகூர் போத்தனூர் வழித்தடம், இரட்டை ரயில்பாதையாக மாற்றப்பட வேண்டும். முன்னர் தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.போத்தனூர் வழியே செல்லக்கூடிய பிரதான ரயில்கள் கோயம்புத்தூர் - மங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் -பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூர் இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ், போன்ற ரயில்கள் போத்தனூரில் நின்று செல்ல, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'சிற்றுண்டி உணவகங்கள் வேண்டும்'

''ரயில்களை பராமரிக்க, மூன்று 'பிட்' லைன்கள், நான்கு 'ஸ்டெப்லிங் லைன்கள்' அமைக்கப்பட வேண்டும். தற்சமயம் ஐந்து நடை மேடைகள் உள்ளன. கூடுதலாக ஆறாவது நடைமேடை அமைக்கப்பட வேண்டும். அதிக கொள்ளளவு கொண்ட உயர்மட்ட தண்ணீர் தொட்டி, பராமரிப்பு யார்டு, எஸ்கலேட்டர், டார்மிட்டரி அறைகள், ரயில் ஓட்டுநர்கள் ஓய்வு அறை, கிளாக் ரூம் அமைக்கப்பட வேண்டும். சைவம், அசைவ சிற்றுண்டி உணவகங்கள், வடக்கு, கிழக்கு, பகுதியில் நுழைவாயில்கள் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார் சுப்ரமணியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை