உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க... கொஞ்சம் ஆதரவு; நிறைய எதிர்ப்பு!கிராம சபையில் எதிரொலித்த மக்கள் குரல்

நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க... கொஞ்சம் ஆதரவு; நிறைய எதிர்ப்பு!கிராம சபையில் எதிரொலித்த மக்கள் குரல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியுடன், எட்டு ஊராட்சிகளை இணைக்கும் திட்டத்துக்கு ஒரு சில ஊராட்சிகள் ஆதரவும், பெரும்பாலான ஊராட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. வரி உயர்வு, வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பிரச்னைக்கு என்ன தீர்வு காணப்படும் என்பதே கேள்வியாக உள்ளது.பொள்ளாச்சி நகராட்சி மொத்தம், 13.87 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. கடந்த, 1983 ஏப்.,1ல் தேர்வு நிலையிலிருந்து, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, நகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யும் வகையில், நகராட்சி கமிஷனர், தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய ஆணையாளர்களுக்கு கடிதம் அனுப்பினார்.அதில், ஜமீன் முத்துார், புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, தாளக்கரை, கிட்ட சூராம்பாளையம் ஆகிய எட்டு ஊராட்சிகளில், நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி தர ஒன்றிய ஆணையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.ஒன்றிய ஆணையாளர்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி தர வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த, 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சிகளை இணைக்க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கிராம சபை

ஆச்சிப்பட்டி ஊராட்சி மக்கள் சார்பில், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுவில், 'பொள்ளாச்சி நகராட்சியையொட்டி ஆச்சிப்பட்டி ஊராட்சி உள்ளது. ஆ.சங்கம்பாளையம், ஆச்சிப்பட்டி என்ற இரண்டு வருவாய் கிராமங்களையும், தில்லை நகர், திரு.வி.க., நகர் உள்ளிட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கிய ஊராட்சியாக உள்ளது.அதில், நகரப்பகுதியில் இருந்து, மூன்று கி.மீ., துாரத்தில் ஆச்சிப்பட்டி உள்ளது. நகராட்சிக்கு அருகில் உள்ள ஆ.சங்கம்பாளையம், தில்லை நகர், திரு.வி.க., நகர் ஆகிய மூன்று குக்கிராமங்களை மட்டும் நகராட்சி எல்லை விரிவாக்க திட்டத்தில் இணைக்கலாம். ஆச்சிப்பட்டி வருவாய் கிராமத்தை ஊராட்சியாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கிட்டசூராம்பாளையம் (பணிக்கம்பட்டி) ஊராட்சி, நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாக்கினாம்பட்டி ஊராட்சியில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும் என ஊராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தாளக்கரை மக்கள், ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதற்குரிய தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. புளியம்பட்டி ஊராட்சியில், நகராட்சியுடன் இணைப்பது குறித்து பரிசீலனை செய்யவும், அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஜமீன் முத்துார், ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சிகள் ஆதரவு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. சின்னாம்பாளையம் ஊராட்சியில் இது குறித்து ஆலோசிக்கவில்லை.

காரணம் என்ன?

ஊராட்சிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகளவு உள்ளன. இதனால், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக பல குடும்பங்கள் பயன்பெறுகின்றன.இந்நிலையில், ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதால், இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவர்.மேலும், ஊராட்சிகளில் குறைந்தபட்ச வரியை செலுத்தி வருகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவு வசிக்கும் கிராமப்புறத்தை, நகரத்துடன் இணைப்பதால் வரி உயர்வு ஏற்பட்டால் மிகுந்த சிரமம் ஏற்படும் என்ற அச்சமும் நிலவுகிறது.இதனால், நகராட்சியுடன் இணைப்பதற்கான தீர்மானத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகிறது. கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினாலும், நகராட்சியை விரிவுபடுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டாக வேண்டும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ