கோவை;கோவை லோக்சபா தேர்தலுக்கான, 'மேனேஜ்மென்ட் பிளான்' தயாரிக்கும் பணியில், தேர்தல் பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.வரும் ஏப்ரல் 16ம் தேதியை உத்தேசமாக வைத்து, லோக்சபா தேர்தல் பணி மேற்கொள்ள, தேர்தல் பிரிவினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது. கோவை லோக்சபா தொகுதியில் பயன்படுத்துவதற்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், விவி பேட் மிஷின்கள், இவற்றுக்கு தேவையான பேட்டரிகள், ரசீது அச்சடிப்பதற்கான காகிதம் உள்ளிட்டவை ஏற்கனவே தருவிக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கின்றன. 3,077 ஓட்டுச்சாவடிகள்
சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எண்ணிக்கை அடிப்படையில், மாவட்ட அளவில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைகின்றன. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கன்ட்ரோல் யூனிட் இயக்குபவர், வாக்காளர் பெயர் வாசிப்பவர், உதவியாளர் என, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். அதிகமான ஓட்டுகள் உள்ள ஓட்டுச்சாவடிக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக, அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவில், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. மும்முரம்
தேர்தல் தேதி அறிவித்ததும் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும் என்பதால், அடுத்த கட்டமாக, 'தேர்தல் மேனேஜ்மென்ட் பிளான்' தயாரிக்கும் பணியில், அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:கோவை மாவட்ட லோக்சபா தேர்தல் பிளான் என்பது, தேர்தல் பணி குறித்த ஒட்டுமொத்த ஜாதகம் என சொல்லலாம். மாவட்டம் முழுவதும் அமையும் ஓட்டுச்சாவடிகள் விபரம்; அதன் வரைபடம். ஸ்ட்ராங் ரூமில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துக் கொண்டு ஓட்டுச்சாவடிக்கு செல்லும் வழித்தடம். ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை மையமான ஜி.சி.டி.,க்கு எடுத்துச் செல்லும் வழித்தடம் ஆவணமாக பதிவு செய்யப்படும்.பதற்றமான, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியல் காவல்துறையிடம் பெறப்படும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பணிபுரியும் போலீசார் விபரம், ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க மண்டல குழு, பறக்கும் படை அதிகாரிகள், தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகள், இவர்களுக்கு உதவி செய்யும் அதிகாரிகள் விபரம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.வாக்காளர்கள் புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களது தொடர்பு எண், உள்ளிட்ட தகவல்களும் இருக்கும். மேலும், தேர்தல் பணியில் ஓட்டுப்பதிவுக்கு எத்தனை ஊழியர்கள் தேவை, ஓட்டு எண்ணிக்கைக்கு எத்தனை பேர் தேவை, இயந்திரங்களை எடுத்துச் செல்ல எவ்வளவு வாகனங்கள் தேவை என்பன உள்ளிட்ட அனைத்து தகவலும், 'மேனேஜ்மென்ட் பிளான்' புத்தகத்தில் இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
18 ஆயிரம் பணியாளர்கள்
தேர்தல் சமயத்தில், உடல் நலக் குறைவு, தவிர்க்க முடியாத காரணங்கள் உள்ளிட்ட சூழல் நிமித்தமாக, பலரால் உரிய நேரத்தில் பணிக்கு வர முடியாத நெருக்கடி ஏற்படும். அதனால், 20 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' அடிப்படையில் இருப்பர். இதன் படி, கோவை மாவட்டத்துக்கு, 18 ஆயிரம் பணியாளர்கள் தேவை என கணக்கிடப்பட்டிருக்கிறது.