உடுமலை : திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செயற்கை கால் அளவீடு செய்வதற்காக வந்த மாற்றுத்திறனாளிகளை, நீண்டநேரம் காத்திருக்கச் செய்து, பாடாய்படுத்திவிட்டனர்.கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு சார்பில், செயற்கை அவயங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், செயற்கை கால் வழங்குவதற்கான அளவீடு முகாம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.மதியம், 2:00 மணிக்கு அளவீடு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்கள் பாதுகாவலர்கள் உதவியுடன் காலை, 10:30 மணி முதலே, கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்துவங்கிவிட்டனர்.மாற்றுத்திறனாளிகள் 19 பேர் மற்றும் பாதுகாவலர்கள் என, 40 பேர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் முன், காத்திருந்தனர்.மதியம் திருப்பூருக்கு வரவேண்டிய செயற்கை கால் அளவீடு செய்யும் தனியார் நிறுவன பணியாளர், தவறுதலாக, கோவைக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால், காலைமுதலே காத்திருந்த மாற்றுத் திறனாளிகள் மிகவும் சோர்வடைந்துவிட்டனர்.அளவீடு செய்யும் பணியாளர், மாலை, 4:30 மணிக்குதான் திருப்பூர் வந்தடைந்தார். அதன்பின்னரே, செயற்கை அவயங்களுக்கான அளவீடு துவங்கியது. அளவீடு முடிந்து, 6:30 மணிக்குதான் மாற்றுத்திறனாளிகள் வீடு திரும்ப முடிந்தது.முகாமில், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை காலுக்கான அளவீடு செய்யப்பட்டது.மாற்றுத்திறனாளிகளை, இதுபோல் நீண்ட நேரம் காத்திருக்கச் செய்து, மன வேதனைக்கு உள்ளாக்கக்கூடாது. முகாம்களை உரிய நேரத்தில் நடத்த, மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.