40 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது
பெ.நா.பாளையம்; இடிகரையில் நடந்த திருட்டுக்கள் தொடர்பாக, 40 முறை சிறை சென்றவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரையில் கடந்த மாதம், 6ம் தேதி சுரேஷ், 44, இளைய பல்லவன், 34, ஆகியோரது வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு போனது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், காளிபாளையம் செந்தில் என்கிற பால்கார செந்தில், 55, இத்திருட்டை செய்தது தெரியவந்தது. இவரிடம் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், இவர், 40க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என தெரியவந்தது. இவரிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செந்தில், சிறையில் அடைக்கப்பட்டார்.