உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ காப்பீடு அட்டை: கல்வி கடன் வழங்கும் விழா

மருத்துவ காப்பீடு அட்டை: கல்வி கடன் வழங்கும் விழா

போத்தனுார்;மாணவர்களுக்கு கல்வி கடன் மற்றும் பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கும் விழா ஈச்சனாரி கற்பகம் பல்கலை வளாகத்தில் நடந்தது. எம்.பி.க்கள், சண்முகசுந்தரம், நடராஜன், கலெக்டர் கிராந்தி குமார் ஆகியோர், 10 மாணவர்களுக்கு, 30.74 லட்சம் கல்வி கடனுக்கான ஆணைகளையும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கான அட்டையையும் வழங்கினர்.கலெக்டர் கிராந்திகுமார் பேசுகையில், '' கல்வி கடன் பெற, ஆறு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை, பதிவு செய்த, 3 ஆயிரம் பேருக்கு, நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்து. மாவட்டம் முழுவதும், 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டோருக்கு கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மாவட்டம் முழுமையும், 11.5 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ளன. 'ஐந்து லட்சம் குடும்பத்தினருக்கு மட்டுமே மருத்துவ காப்பீடு அட்டை உள்ளன. புதிய அட்டை, தொலைந்து போன அட்டைகளை புதுப்பித்து புதிய அட்டைகள் வழங்க கோரி, 85 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இம்மாத இறுதிக்குள், 1.5 லட்சம் அட்டைகள் வழங்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் ஆறு லட்சம் மக்கள் பயனடைவர்,'' என்றார்.தொடர்ந்து, ஐந்தாயிரம் பேருக்கு காப்பீடு திட்ட அட்டை வழங்கப்பட்டது. கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாசலபதி, மூத்த ஆலோசகர் (கல்வி கடன்) வணங்காமுடி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (காப்பீடு திட்டம்) பாண்டியராஜன், மதுக்கரை ஒன்றிய குழு உறுப்பினர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்