| ADDED : ஜன 02, 2024 11:38 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கால்நடை மருத்துவமனை அருகே, பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளது. அங்கு விபத்தை தடுக்க, குப்பை மூட்டையை தடுப்பாக அமைத்துள்ளனர்.பொள்ளாச்சி நகரில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கு குழிகள் மோசமான நிலையில் உள்ளன. பல இடங்களில் குழிகள் உயரமாகவும், உடைந்தும் காணப்படுகின்றன. தற்போது வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும் சூழலில், ஆள் இறங்கும் குழிகள் மோசமாக உள்ளதால், கழிவுநீர் திறந்தவெளியில் செல்லும் அவல நிலை ஆங்காங்கே காணப்படுகின்றன.இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்காணிப்பு செய்து அவற்றை சரி செய்ய முன்வரவில்லை.இந்நிலையில், பொள்ளாச்சி கால்நடை மருத்துவமனை அருகே ஆள் இறங்கும் குழி சேதமடைந்து, மேல் மூடி உடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. அப்பகுதியில் தடுப்பு அமைக்கப்படாததால், குப்பை மூட்டையே தடுப்பாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழி சேதமடைந்த இடத்தில் ரோட்டோரம் கிடந்த குப்பை மூட்டையை அவ்வழியாக சென்றவர்கள் தடுப்பாக வைத்துள்ளனர்.விபத்தை தடுக்க தற்காலிக தடுப்பாக அமைத்தாலும், அதை உடனடியாக அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கு தடுப்புகள் அமைக்கலாம். ஆனால், அதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்த ஒரு இடம் மட்டுமல்ல, பல இடங்களில் ஆள் இறங்கும் குழிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.இவற்றை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தாலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளையும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நகராட்சியையும் கை காட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.ஆள் இறங்கும் குழிகள், விபத்துகள் ஏற்படுத்தும் மையமாக மாறியுள்ளன. இரு துறைகளும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.