| ADDED : நவ 23, 2025 05:32 AM
கோவை: கோவை மாவட்ட இணைய தளத்தில், பிரத்யேக தேடுதல் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாக்காளர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, எளிதாக தேடி பூர்த்தி செய்யலாம். கலெக்டர் பவன்குமார் அறிக்கை: கோவை மாவட்டம் முழுக்க உள்ள, பத்து சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவத்தினை திரும்பப் பெற்று, செயலி மூலம் பதிவேற்றம் செய்யும் பணி, நடந்து வருகிறது. கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில், வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் சனி, ஞாயிறுகளில் உதவி மையங்கள் அமைத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கணக்கீட்டு படிவங்களில் கோரப்பட்டுள்ள, 2002 மற்றும் -2005-ம் ஆண்டின் வாக்காளர் அல்லது அவர்களது உறவினர்கள் (தாய், தந்தை, தாத்தா, பாட்டி) விவரங்களை கண்டறிவதை எளிமைப்படுத்தும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகத்தால் பிரத்யேக தேடுதல் மென்பொருள் http://Coimbatore.nic.inஎன்ற மாவட்ட இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை அறிய, மேற்கண்ட இணையதளத்தில் வாக்காளரின் பெயர் அல்லது பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளீடு செய்து எளிதில் கண்டறியலாம். இதன்மூலம், கணக்கீட்டு படிவத்தை எளிதாக பூர்த்தி செய்து, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் வழங்கலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.