| ADDED : ஜன 28, 2024 12:26 AM
கோவை:சட்ட விரோதமாக கோவையில் தங்கி இருந்த நைஜீரிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டனர்.அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். போலீசார் அவரது ஆவணங்களை பரிசோதித்த போது, அவரது பெயர் இம்மானுவேல், 38; விசா காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது.மேலும் விசாரணையில் இவர் மும்பையில் தங்கி இருந்து பனியன் வியாபாரம் செய்து வந்ததும், வேலை விஷயமாக திருப்பூர் வந்தபோது, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததும் தெரிந்தது.இதையடுத்து, ரேஸ்கோர்ஸ் போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவர் கடந்த, 22ம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் நேற்று 'டிஸ்சார்ஜ்' ஆனார். அவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.