கோவை: தமிழக அரசு ஓரவஞ்சனை காட்டுவதாக அதிருப்தியில் இருக்கும் துாய்மை பணியாளர்களின் பிரச்னைகளுக்கு, இன்று கோவை வரும் முதல்வர் தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியில், 4,652 ஒப்பந்த துாய்மை பணியாளர், 1,999 நிரந்தர பணியாளர், 910 கொசு ஒழிப்பு பணியாளர், 500க்கும் மேற்பட்ட டிரைவர், கிளீனர்கள் பணிபுரிகின்றனர். குப்பை மேலாண்மை பணியானது, இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இது பணி நிரந்தரம் எதிர்பார்ப்பில் இருந்த, தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறம் இருக்க, மாவட்ட நிர்வாகம் அறிவித்த ரூ.770 தினக்கூலி வழங்கக்கோரி போராட்டங்களில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டது, மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், செம்மொழி பூங்காவை திறந்து வைப்பதற்காக, இன்று கோவை வரும் முதல்வர், துாய்மை பணியாளர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, கோபத்தை தணிப்பாரா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இலவச உணவு எதற்கு? துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: துாய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கி, பணி நிரந்தர கோரிக்கையை அரசு திசை திருப்ப பார்க்கிறது. எங்களுக்கு உணவு வேண்டாம்; பணி நிரந்தரம்தான் வேண்டும். 2014 முதல் இதுவரை எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் இ.பி.எப்., தொகை எங்கே என்று தெரியவில்லை. இ.எஸ்.ஐ., தொகையையும் செலுத்தவில்லை. 2022ல் மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஒப்பந்த பணியாளர்களிடம் சம்பளத்தில் காணாமல் போன தலா ரூ.19 ஆயிரத்து, 170ஐ உடனடியாக தொழிலாளர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இப்படி, நியாயமான, 15 அம்ச கோரிக்கைகளுக்காக போராடும் எங்களை கைது செய்கின்றனர். எங்கள் மீது அரசுக்கு இவ்வளவு ஓரவஞ்சனை ஏன் என்று தெரியவில்லை. முதல்வர்தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வேலை நிறுத்தம் செய்ய முடிவு
துாய்மை பணியாளர்கள் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர்(துாய்மை பணியாளர் பிரிவு) ஸ்டாலின் பிரபு கூறுகையில், ''எங்களுக்கு பணி நிரந்தரம்தான் முக்கியம். பல கட்டங்களாக போராடியும் இதுவரை தீர்வு இல்லை. கோரிக்கை பட்டியலை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சமர்ப்பித்தும் நிறைவேற்றவில்லை. எனவே, வேலை நிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் இரு நாட்களில் வழங்க உள்ளோம்,'' என்றார்.