உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பது குற்றம் புரிய துணை! ஊழல் எதிர்ப்பு இயக்கம் கண்டனம்

ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பது குற்றம் புரிய துணை! ஊழல் எதிர்ப்பு இயக்கம் கண்டனம்

கோவை:'கோவை நகர் பகுதியில் சாலைகள், தெருக்கள், நடைபாதைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்' என, மாநகராட்சி கமிஷனருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட பிரிவு செயலாளர் வேலு கடிதம் எழுதியுள்ளார்.கோவையின் முக்கிய சாலைகள், நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி, நுாறடி ரோடு...இப்படி மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளில், பொதுமக்கள் நடந்து செல்லவே முடிவதில்லை. அந்தளவுக்கு நடைபாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. எந்த அதிகாரியும் கண்டுகொள்ளாததால், போலீசாரின் துணையுடன் ஆக்கிரமிப்பு ஜம்மென்று தொடர்கிறது. பொதுமக்களின் அவஸ்தையும் தொடர்கிறது.இது குறித்து, நேற்று மாநகராட்சி கமிஷனரிடம், ஊழல் எதிர்ப்பு இயக்க மாவட்ட பிரிவு செயலாளர் வேலு, கடிதம் வாயிலாக கொட்டித்தீர்த்து விட்டார்.கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நகரின் பல பகுதிகளில், வணிக நிறுவனங்கள், கடை நடத்துவோர், தெரு வியாபாரிகள் மற்றும் பிறரால் பொதுச்சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாலைகளில் இறங்கி நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். வாகனங்களில், அடிபடும் சூழல் ஏற்படுகிறது.சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். அதை உறுதிப்படுத்த வேண்டியது, அரசு அதிகாரிகளின் கடமை. ஆனால், கையூட்டு பெற்றுக்கொண்டு, சட்ட விரோத அத்துமீறல்களை கண்டுகொள்வதில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இது கிரிமினல் குற்றம்.உயர்நீதிமன்ற உத்தரவுகளை மீறுவது, நீதிமன்ற அவமதிப்பாகும். சட்ட விதிமுறைகளை அப்பழுக்கின்றி அமல்படுத்தாமல் ஒதுங்குவது, கடமை தவறும் குற்றம். அது, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்து ஒத்துழைப்பதற்கு சமம். எனவே, ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, சாலைகள், தெருக்கள் மற்றும் நடை பாதைகளில் எவ்வித இடையூறும் இன்றி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஊடகங்கள், தன்னார்வலர்கள் இப்படி அவ்வப்போது, நடைபாதை ஆக்கிரமிப்புகளை சுட்டிக்காட்டும்போது, பெயரளவுக்கு அவற்றை அகற்றுகின்றனர் அதிகாரிகள். மீண்டும் சில நாட்களிலேயே பழையபடி ஆக்கிரமிப்பு துவங்கி விடுகிறது. ஆகவே, நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி