| ADDED : பிப் 18, 2024 02:02 AM
தொண்டாமுத்தூர்;தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் குறித்த ஆலோசனை கூட்டம், பேரூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், தெற்கு ஆர்.டி.ஓ.,வுமான பண்டரிநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், பேரூர் தாசில்தார் ஜோதிபாசு, தேர்தல் பிரிவு அதிகாரிகள், பேரூர் டி.எஸ்.பி., வெற்றிச்செல்வன், மாநகர உதவி கமிஷனர்கள் ரகுபதிராஜா, வீரபாண்டியன் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில், மொத்தம், 310 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், எந்தெந்த ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என்பது குறித்து கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில் மொத்தமுள்ள, 310 ஓட்டுச்சாவடிகளில், 75 ஓட்டுச்சாவடிகள் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என குறிப்பிட்டுள்ளனர். விரைவில் பதட்டமான, 75 ஓட்டுச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.