சூலூர்:அரசு பள்ளிகளின் கட்டமைப்புகள், கல்வி தரம் உயர்ந்திருப்பதால், பெற்றோருக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. அதேபோல், மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்ந்துள்ளதால், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மார்ச் 1 ம்தேதி முதல் துவங்கியது. அதன் அடிப்படையில் கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை உட்பட ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உயர்கல்வியில் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகள், பொருளாதாரத்தில் பின் தங்கி, படிப்பை தொடர முடியாமல் இடையில் நிற்கும் மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கும் இடமாக அரசு பள்ளிகளை பெற்றோர் பார்க்கத்துவங்கியுள்ளனர். தேர்ச்சி சதவீதம்அதிகரிப்பு
அரசு பள்ளிகளின் கட்டமைப்பையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தும் வகையில், ஹை டெக் வகுப்பறைகள், தனித்திறன்களை மேம்படுத்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதால், பெற்றோரின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள துவக்க, நடுநிலை, உயர் நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மூலமாக கட்டமைப்பு மற்றும் பள்ளிக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர். முன்னாள் மாணவர்களை கொண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருவதாலும் மாணவர்களும் உற்சாகமடைந்துள்ளனர். மாணவர் சேர்க்கை
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி திறந்த முதல் நாளில், மேட்டுப்பாளையம், காரமடை பகுதிகளில் தமிழ் மீடியத்தில், 581 சிறுவர்களும், ஆங்கில மீடியத்தில், 177 சிறுவர்கள் என, மொத்தம், 758 பேர் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். தொடர்ச்சியாக மாணவர்களின் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சூலூர் வட்டாரத்தில், 41 துவக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பாண்டில், ஒன்றாம் வகுப்பில் மட்டும் இதுவரை, ஆயிரத்து, 36 குழந்தைகள் சேர்ந்துள்ளனர். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.கடந்த ஆண்டு சேர்க்கை எண்ணிக்கையை விட, அதிகமாக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆசிரியர்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வீரபாண்டி, சின்னதடாகம், நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், அசோகபுரம், குருடம்பாளையம், நாயக்கன் பாளையம், பிளிச்சி ஆகிய ஊராட்சிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், வீரபாண்டி பேரூராட்சிகளிலும், கூடலூர் நகராட்சியிலும், 72 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் முதல் நாளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பல்வேறு அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 600 மாணவ, மாணவிகள் வகுப்புகளில் சேர்ந்தனர்
புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:தங்கள் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை நேரடியாக சென்று பெற்றோர் பார்க்க வேண்டும். அங்குள்ள வசதிகள் குறித்தும் தேர்ச்சி சதவீதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கற்றல் முறை, அதற்கான உபகரணங்கள், கற்பிக்கும் முறை என, அனைத்திலும் புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்துமே மாணவர்களின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்தால், பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.