உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முடங்கிய கழிவுநீர் வடிகால் கட்டும் பணி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் புகார்

முடங்கிய கழிவுநீர் வடிகால் கட்டும் பணி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் புகார்

அன்னுார்: கழிவுநீர் வடிகால் கட்டும் பணி முடங்கியதால், கிராம மக்கள், அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.குப்பனுார் ஊராட்சி, அழகேபாளையத்தில், 60 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கழிவு நீர் வடிகால் அமைக்க பத்து ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, வடிகால் கட்டும் பணி துவங்கியது. மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி துவக்கத்திலேயே முடங்கியது. இதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த 40 குடும்பங்கள், நேற்று, அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தனர்.ஒன்றிய அதிகாரிகளிடம் பேசுகையில், 'கழிவு நீர் வடிகாலுக்காக, 10 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறோம். கழிவுநீர் வீதிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகின்றன. சிலரது எதிர்ப்பால், கழிவுநீர் வடிகால் கட்டாமல் உள்ளனர். விரைவில் பணி துவக்காவிட்டால், மறியல் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாசங்கரி, செந்தில்குமார், ஊராட்சி தலைவர் ரஞ்சிதம் ஆகியோர், 'உடனடியாக கள ஆய்வு செய்கிறோம். விரைவில் வடிகால் கட்டும் பணி துவங்கும்' என உறுதியளித்தனர். பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் கூறுகையில், 'தற்போது கழிவுநீர் வடிகால் கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் பட்டத்தரசி அம்மன் கோவில், மதுரை வீரன் கோவில் உள்ளிட்ட நான்கு கோவில்கள் உள்ளன. கோவில்களை ஒட்டி கழிவுநீர் வடிகால் அமைக்காமல் மாற்று வழியில் அமைக்கும்படி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை