உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மக்கள் பொழுதுபோக்கு வசதிக்காக பெள்ளாதி குளத்தில் படகு இல்லம் வேண்டும்

 மக்கள் பொழுதுபோக்கு வசதிக்காக பெள்ளாதி குளத்தில் படகு இல்லம் வேண்டும்

மேட்டுப்பாளையம்: -: ஊராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், பொது மக்களின் பொழுது போக்கு வசதிக்காக, பெள்ளாதி குளத்தில் படகு இல்லம் அமைத்து சவாரி விட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சியில், 110 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் உள்ளது. இந்த குளத்திற்கு காரமடை சுற்றுப்பகுதியில் பெய்யும் மழை நீர் வருகிறது. மேலும், ஏழு எருமை பள்ளத்தில் வரும் மழை நீர், இக்குளத்திற்கு வரும் வகையில், வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், இக்குளம் சேர்க்கப்பட்டு உள்ளதால், ஆண்டு முழுவதும் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருப்பதால், படகு இல்லம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊராட்சி சார்பில் பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் பெள்ளாதி ஊராட்சி பொது மக்கள் கூறியதாவது: இந்த ஊராட்சியில் தொழில் நிறுவனங்கள் ஏதுமில்லை. வீட்டு வரிகள், குடிநீர் கட்டணம் வாயிலாக கிடைக்கும் வருவாய் மற்றும் அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியை கொண்டு, ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுகின்றன. போதிய நிதி இல்லாததால், ஊராட்சியில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த ஊராட்சியில், 30 அடி உயரத்தில், 110 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய குளம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருக்கும். அதனால் படகு இல்லம் அமைத்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், படகு சவாரி விட்டால், அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கும். சுற்றுலா பயணிகள் வருகையை அடுத்து, இப்பகுதியில் கடைகள் நிறைய அமைக்க வாய்ப்பு உள்ளது. பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ