பாதையில் அமர்ந்து போதை; சூலுார் மக்கள் அச்சம்
சூலுார்; சூலுார் கே.பி.ஜி. கார்டனுக்கு செல்லும் வழியில் அமர்ந்து மது குடிக்கும் நபர்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சூலுார் உழவர் சந்தை அருகே கே.பி.ஜி. கார்டன், கே.பி.ஜி. நகர், சுப்பையா நகர் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. உழவர் சந்தையை ஒட்டியுள்ள ரோட்டில் அமர்ந்து, தினமும் மாலை முதல் நள்ளிரவு வரை குடிமகன்கள் மது குடித்து அடாவடியில் ஈடுபடுவதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''மாலை நேரத்தில் எங்கள் பகுதிக்கு செல்லும் ரோட்டில் அமர்ந்து மது குடித்துவிட்டு, போதையில் போவோர் வருவோரிடம் ரகளை செய்கின்றனர். மது பாட்டில்கள், டம்ளர்களை தெரு முழுக்க வீசி செல்கின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள், அந்த ரோட்டில் நடக்கவே அச்சப்படுகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளோம்,' என்றனர்.