| ADDED : ஜன 18, 2024 12:18 AM
கோவை : மாவட்ட அளவிலான கபடி போட்டியின் ஆண்கள் பிரிவில், புலியகுளம் பி.ஜே., பிரதர்ஸ் அணி கோப்பையை வென்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவில்மேடு இளைஞர் மன்றம் சார்பில் 57ம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி, கோவில்மேடு இளைஞர் மன்ற மைதானத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் 20க்கும் மேற்பட்ட அணிகள், நாக் அவுட் முறையில் விளையாடின. இதன் இறுதிப்போட்டியில், பி.என்.பாளையம் இளஞ்சிங்கம் மற்றும் புலியகுளம் பி.ஜே., பிரதர்ஸ் அணிகள் மோதின. போட்டி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய, பி.ஜே., பிரதர்ஸ் வீரர்கள் விட்டுக்கொடுக்காமல் விளையாடினர்.ஆட்ட நேர முடிவில், 26 - 13 என்ற புள்ளிக்கணக்கில் இளஞ்சிங்கம் கபடி அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தனர். தெலுங்குபாளையம் கபடி கிளப் மற்றும் கே.சி.கே., கணுவாய் கபடி அணிகள் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு, ரொக்கம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன.