குடிமங்கலம் : மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதலாக துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்படாததால், சுகாதார சீர்கேடு கிராமங்களில் நிரந்தரமாகியுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளில், கடந்த 2015ம் ஆண்டில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 'துாய்மைக்காவலர்'கள் நியமிக்கப்பட்டனர். குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளிலும், இத்திட்டத்தின் கீழ், துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.அந்தந்த கிராமங்களில், வசிப்பவர்களே, துாய்மைக்காவலராக நியமிக்கப்பட்டு, கையுறை, மேல்சட்டை, தொப்பி வழங்கினர்.திட்ட நிர்வாகத்தை ஊராட்சிகள் செய்தாலும், துாய்மைக்காவலர்களுக்கு, சம்பளம் வழங்குவது, பணியை கண்காணிப்பது போன்ற பணிகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்திலும் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், பல கிராமங்களில், மக்கள் தொகைக்கு ஏற்ப துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. தள்ளுவண்டிகளில், அதிக குப்பையை சேகரிப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.இதனால், பெரும்பாலான ஊராட்சிகளில், வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே, வீடுதோறும் குப்பை சேகரிக்கின்றனர். சேகரிக்கும் குப்பையை ஒரே இடத்தில், குவித்து தீ வைத்து எரிக்கின்றனர்.திடக்கழிவு மேலாண்மை, இயற்கை உரம் தயாரித்தல் ஆகிய திட்டங்கள் முற்றிலுமாக முடங்கி விட்டது. அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில், டிராக்டர் வாயிலாக குப்பையை சேகரித்து, குப்பைக்கிடங்குக்கு எடுத்துச்செல்கின்றனர்.புதிய குடியிருப்புகளில், குப்பை சேகரிக்கப்படாததால், தெருவோரங்களில், கழிவுகள் வீசப்படுவது அதிகரித்துள்ளது.கடந்த, 2020ல், கிராமங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, கூடுதலாக துாய்மைக்காவலர்கள் நியமிக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பின்படி, கூடுதலாக துாய்மைக்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை இல்லை.இதே போல், தள்ளுவண்டிகளில், அதிக குப்பையை சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. இதை தவிர்க்க, நகராட்சிகளில், குப்பையை சேகரிக்க பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களை கிராமங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், சில ஊராட்சிகளுக்கு மட்டும் வாகனங்கள் வழங்கப்பட்டு, அவையும், காட்சிப்பொருளாக மாறி விட்டன.எனவே, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில், நிலவும் நிரந்தர சுகாதார சீர்கேடு பிரச்னை, திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.