| ADDED : நவ 18, 2025 04:31 AM
கோவை: 'நந்தவனம்' புத்தகத்தை காப்பி அடித்து, செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக, குற்றஞ்சாட்டியுள்ள பா.ம.க.,நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, உரிய அங்கீகாரம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 'மாநகரின் மையப்பகுதியில் இருக்கும், 180 ஏக்கர் சிறைச்சாலையை ஊருக்கு வெளியே மாற்றிவிடலாம்; இந்த, 180 ஏக்கர் பரப்பளவை மக்கள் பயன்படுத்தும் இடமாக மாற்றலாம்' என, அரசுக்கு யோசனைகள் வழங்கினோம். அத்துடன், 'நந்தவனம்' என பெயர் வைத்து மக்கள் பயன்படுத்தும் திட்டமாக கொண்டுவருவது குறித்து, புத்தகமாகவும் வெளியிட்டோம். இந்த திட்டத்தில் நுாலகம், அருங்காட்சியகம் உள்ளிட்டவை இடம்பெறுவது குறித்து காணொளியும் வெளியிட்டிருந்தோம். அதை இன்று தமிழக அரசு செம்மொழி பூங்கா திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பே, கட்டடக்கலை நிபுணரை வைத்து கட்டடங்கள் வடிவமைத்து வீடியோவும் வெளியிட்டோம். நுழைவாயில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட கட்டடம், டிசைன் ஆகியன அப்படியே, 'ஈ அடிச்சான் காப்பி மாதிரி, செம்மொழி பூங்காவில் இடம்பெற்றுள்ளது. அருங்காட்சியகம், ஆம்பி தியேட்டர், கண்ணாடி கட்டடம் என நந்தவனம் புத்தகத்தை காப்பி அடித்து அப்படியே செம்மொழி பூங்கா அமைத்துள்ளனர். பா.ம.க. நல்ல யோசனைகளை வழங்குகிறது. எனவே, எங்களுக்கு சான்றிதழ்கள் போன்று சிறு அங்கீகாரமாவது வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.