உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்றச்செயலில் ஈடுபடாமல் தடுப்பதற்கு போலீஸ் ப்ரோ! மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

குற்றச்செயலில் ஈடுபடாமல் தடுப்பதற்கு போலீஸ் ப்ரோ! மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்டம்

கோவை: சிறார்கள் குற்றங்கள், போதைப்பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க, பள்ளிகளிலும் 'போலீஸ் ப்ரோ' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை, வேளாண் துறை மட்டுமின்றி கல்வித்துறையிலும் கோவை சிறந்து விளங்குகிறது. வெளிமாவட்டங்களை சேர்ந்த பலரும் இங்குள்ள பள்ளி, கல்லுாரிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். சமீபகாலமாக பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, போதைப்பொருட்கள் பழக்கத்துக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களும் இவ்வரிசையில் இணைந்திருக்கின்றனர். பல குற்றங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகின்றன. சிறார்கள் பலரும் தங்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தெரிவிக்கத் தயங்குகின்றனர். அதனால், 'போலீஸ் ப்ரோ' திட்டத்தை பள்ளிகளிலும் போலீசார் செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், தீவிரமாக செயல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் தங்களுக்கு நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னால், பாதிக்கப்படுவோம் என நினைத்து சொல்வதில்லை. அவர்களிடமுள்ள தயக்கத்தை போக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாணவியர் பயிலும் பள்ளிகளுக்கு மகளிர் போலீசார் செல்வர். அவர்களது மொபைல் போன் எண்ணுக்கு அழைத்தால் ரகசியமாக விசாரணை நடத்தப்படும். எக்காரணம் கொண்டு மாணவியரின் விபரம் வெளியே தெரியாது என்கிற நம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, 18 மகளிர் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. தினமும் ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பள்ளிக்கு சென்று டிஜிட்டல் திரை பிரசார வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி பருவத்தில் ஏற்படும் காதலால் உண்டாகும் பிரச்னைகள் குறித்தும் அறிவுரை வழங்கப்படுகிறது. மாணவர்களிடம், பெண் குழந்தைகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் கூறும் புகார்கள் ரகசியமாக வைத்திருப்பதால், நண்பர்கள் தவறு செய்தாலும், அவர்களை நல்வழிப்படுத்த புகார் தெரிவிக்க முன் வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி