உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலை வரை நீளும் கடைகளால் சிக்கல்: அதிகரிக்கும் விபத்து அபாயம்

சாலை வரை நீளும் கடைகளால் சிக்கல்: அதிகரிக்கும் விபத்து அபாயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி - ஆழியாறு இடையிலான வழித்தடத்தில், சாலை வரை, கடைகள் விஸ்தீரணம் செய்யப்படுவதால், நாளுக்கு நாள் விபத்து அபாயம் அதிகரிக்கிறது. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு, சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கால், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிடப்பட்டது. அதன்படி, நெடுஞ்சாலைத் துறையினர், பிரதான வழித்தடங்களில் இருந்த சாலையோர ஆக்கிரப்புகளை அகற்றினர். குறிப்பாக, பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, கோவை ரோடு, பல்லடம் ரோடு என, முக்கிய வழித்தடங்களில், இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக, தள்ளுவண்டிக் கடைகள், கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த தற்காலிக ெஷட், சிமென்ட் தரை தளம் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கை சில நாட்கள் மட்டுமே தொடர்ந்தது. அதற்கு பின், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. புதிதாக கடை திறப்பவர்களும் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். அதிலும், பொள்ளாச்சி - ஆழியாறு இடையிலான வழித்தடத்தில், கடைகளில் உள்ள பொருட்கள் சாலை வரை விஸ்தீரணம் செய்யப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி செல்வதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: கடைக்காரர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் கடையை சாலை வரை விரிவாக்கம் செய்கின்றனர். விற்பனை செய்யப்படும் பொருட்கள் குறித்த விபரங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுகின்றனர். இதனால், அத்தியாவசிய தேவைக்கு வருவோர், சாலையை விட்டு ஓரமாக வாகனங்களை நிறுத்த முடிவதில்லை. சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும், விபத்தும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினரின் தொடர் கண்காணிப்பும், நடவடிக்கையும் அவசியம். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ