| ADDED : ஜன 21, 2024 11:48 PM
வால்பாறை;வால்பாறையில் நடந்த முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில், மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறையில், வருவாய்த்துறை சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மருத்துவ காப்பீடு திட்ட முகாம் துவங்கியது. தாசில்தார் வாசுதேவன் தலைமை வகித்தார். முகாமை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி துவக்கி வைத்தார். நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடந்த முகாமில், 1 - 4, 9, 11, 12, 16 ஆகிய வார்டுகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் மூன்று கட்டமாக நடக்கும் முகாமில் கலந்து கொள்பவர்கள், ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் அட்டை நகல்கள் கொண்டு வர வேண்டும்.இதுதவிர, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோருக்கான கடனுதவி முகாம், ஆதிதிராவிட வீட்டு வசதி மற்றும் தாட்கோ, பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும், குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் தொடர்பாகவும் முகாமில் விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என்றனர்.