குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எட்டு நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அன்னூர் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டும் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகின்றன. இதை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், ஊராட்சிக்கு சரியாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காமல் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தனி அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில்,' சாலை விரிவாக்கத்தால் குடிநீர் சரியாக விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வருகின்ற குடிநீரின் அளவைப் பொறுத்து, ஒவ்வொரு வார்டாக, குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.