உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்கு தொடர்ச்சிமலையில் மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சிமலையில் மழை; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொண்டாமுத்தூர்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால், மூன்று நாட்களாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து, நேற்றுமுன்தினம், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, மூன்று மாதங்களாக வறண்டு கிடந்த, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து துவங்கியது.நேற்று முன்தினம் காலை, 8:00 முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, சிறுவாணி அடிவாரத்தில், 73 மி.மீ., மழை பதிவானது. நேற்று அதிகாலை, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 450 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நொய்யல் ஆற்றில் இருந்து குனியமுத்தூர் வாய்க்காலுக்கு, வினாடிக்கு, 50 கன அடி தண்ணீர் செல்கிறது.இதனால் குளங்களுக்கும், நீர்வரத்து துவங்கியுள்ளது. வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்ட மரங்களை அகற்றும் பணியில், பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.நீர்நிலைகளில் மக்கள் இறங்காதவாறு, போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை