| ADDED : டிச 04, 2025 05:14 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த கணக்கெடுப்புப்பணிகள் நடந்து வருவதால், வழக்கமாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் நடைபெறும், மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு நேரமில்லை. இம்மனுக்கள், பல கட்ட விசாரணைக்குப்பின் பல அதிகாரிகளை கடந்து இறுதியில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் போய் சேரும். அதன் பின்பே அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதால், வழக்கமாக மேற்கொள்ளும் நடைமுறைகள் பின்பற்றுவதில்லை. விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள், உங்களுடன் ஸ்டாலின், முதல்வரின் முகவரி, ஜமாபந்தி ஆகியவற்றில் சமர்ப்பித்த மனுக்களும் நிலுவையில் உள்ளன. வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு சிறப்பு திருத்தப்பணிகள் முடிந்ததும், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கும். அதன் பின்பு தேர்தல் அறிவிப்பு வெளியானதும், தேர்தல் பணிகள் துவங்கிவிடும். இதற்கே அரசு அதிகாரிகளுக்கு நேரம் சரியாக இருக்கும். மக்களின் கோரிக்கை மனுக்களை எப்போது பார்ப்பார்கள், எப்படி தீர்வு காண்பார்கள் என்பது கேள்விக்குறிதான். வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொதுவான கோப்புகள் மட்டுமே நிலுவை வைக்கப்பட்டுள்ளன. மற்ற கோப்புகளை அவசர நிலை கருதி முடித்து கொடுக்கிறோம்' என்றனர். கலெக்டர் எப்படியும் நம் பிரச்னைக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையுடன், தேடி வந்து அளித்த பொதுமக்களின் மனுக்கள், எலிப்பசிக்கு இரையாகி விடக்கூடாது.
குறைதீர் கூட்டங்களில்பெறப்பட்ட மனுக்கள்
பத்து தொகுதிகளில் சமீபத்தில் நடந்த ஜமாபந்தியில், 12,125 மனுக்கள் வந்தன. கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மூன்று வாரங்களில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில், 636 மனுக்கள் பெறப்பட்டன. இதே போல் கோவை தெற்கு கோட்டத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், 437 மனுக்களும், வடக்குகோட்டத்தில் 537 மனுக்களும் பெறப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறை தீர் கூட்டத்தில், 1,237 மனுக்களும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில், 12,137 மனுக்களும் பெறப்பட்டன.