| ADDED : பிப் 17, 2024 07:09 AM
பல்லடம்,: பல்லடம் அருகே, வறட்சி காரணமாக, 300 தென்னை மரங்களை வேருடன் பெயர்த்து விவசாயி ஒருவர் வேறு தோட்டத்தில் மறுநடவு செய்துள்ளார்.கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பூராண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி, 55; விவசாயி. ஐந்து ஏக்கரில் 300 தென்னை மரங்களை பராமரித்து வந்தார். வறட்சியால், தென்னை மரங்களை அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பழனிசாமி கூறியதாவது:
நிலத்தடி நீர் 900 அடிக்கும் கீழ் சென்றது. ஐந்து ஆழ்துளைக்கிணறுகள் அமைத்தும், தண்ணீர் கிடைக்கவில்லை. இங்கு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் பாசன வசதியும் கிடையாது. பருவ மழை பெய்தால் ஓரளவுக்கு பயிர்களை காப்பாற்ற முடியும். கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை கிடைக்கவில்லை.எப்படியோ தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னைகளை காப்பாற்றி வந்தேன். தென்னை ஒன்றுக்கு, தினசரி, 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. கோடைக்காலம் துவங்க உள்ளதால், தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களை காப்பாற்றுவது சவாலானது. வெட்டி அழித்து விடலாம் என்று நினைத்தேன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்த விவசாயியும், அகழ் வாகன உரிமையாளருமான கனகராஜ், மரங்களை வேருடன் பெயர்த்து வேறு இடத்தில் நட்டு விடலாம் என்று யோசனை தெரிவித்தார். இதன்படி வேருடன் பெயர்த்து செலக்கரிச்சலை சேர்ந்த சின்னதுரை என்பவரின் தோட்டத்தில் மறுநடவு செய்தோம். தென்னைகள் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. தண்ணீர் அதிகம் தேவையற்ற மாற்றுப்பயிர் நடுவது குறித்து ஆலோசித்து வருகிறேன். இவ்வாறு, பழனிசாமி கூறினார்.