உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரிப்போர்ட்டர் லீக்ஸ்

 ரிப்போர்ட்டர் லீக்ஸ்

கட்சிக்கு ஒன்னு ஜாதிக்கு ஒன்னு; அணிவகுத்து ஓடுது ஆம்புலன்ஸ்

பொள்ளாச்சி காந்திசிலை அருகே, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, ரோட்டுல சைரன் ஒலிக்க விட்டு, ஒன்னு பின்னாடி ஒன்னா ரெண்டு ஆம்புலன்ஸ்கள் மின்னல் வேகத்தில் பறந்தன. அதைக்கண்ட நண்பர் ஒருவர், 'நம்ம ஊருல வாகன எண்ணிக்கை அதிகமானது போல, ஆம்புலன்ஸ் எண்ணிக்கையும் அதிகமாயிருச்சு' என, பேச துவங்கினார். முன்பெல்லாம் அரசு ஆம்புலன்ஸ், தனியார் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்துச்சு. இப்ப, டூரிஸ்ட் வாகனங்கள் போல, ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து நிற்குது. கட்சிக்கு ஒன்னு, ஜாதிக்கு ஒன்றுனு, ஆம்புலன்ஸ்கள் இயக்குறாங்க. ஆம்னி வேன் வாங்கிட்டு ஆம்புலன்ஸ்னு ஓட்டுறாங்க. அதுல எல்லா வசதியும் இருக்குமானு தெரியல. ஆனால், '108' ஆம்புலன்ஸ், ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் தவிர, மத்த ஆம்புலன்ஸ்ல முதலுதவி சிகிச்சை எல்லாம் கொடுக்கறதில்ல. மருத்துவ உதவியாளர்களும் இருக்க மாட்டாங்க. விபத்துல அடிபட்டவங்கள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தா, 'கமிஷன்' கொடுக்கறாங்க. அதனால, ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு, ஆம்புலன்ஸ் தொழில் நடத்துறாங்க. எங்கேயாவது விபத்துனு போன் அழைப்பு வந்தா, வரிசை கட்டி வேகமா போறாங்க. ஆம்புலன்ஸ் சப்தத்துக்கு வழி விடுறாங்களோ இல்லையோ, இவங்க ஆம்புலன்ஸ் ஓட்டுறத பார்த்தாலே, ரோட்டுல எல்லாரும் பயந்து ஒதுங்கறாங்க. லைசென்ஸ் இல்லாதவங்க கூட ஆம்புலன்ஸ் ஓட்டுறாங்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிக இதையெல்லாம் கொஞ்சம் கவனிக்கணும், என்றார்.

ஆளும்கட்சி தொழிற்சங்க தேர்தல்ல எதிர்த்தவங்க பழி வாங்கறாங்களாம்!

பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் ஊழியர்கள் கூட்டமாக நின்று நிர்வாக பிரச்னையை பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு விசாரிச்சேன். பொள்ளாச்சியில அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்ட மூன்று பணிமனைகள் இருக்கு. டெக்னீசியன், டிரைவர், கண்டக்டர் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்காங்க. ஒவ்வொரு பணிமனையிலும், தி,மு.க., வின் தொ.மு.ச., உட்கட்சி தேர்தல் நடந்துச்சு. தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளை பிடிக்க, இரு தரப்புக்கு இடையே போட்டி ஏற்பட்டுச்சு. இப்ப, தேர்தலில் வென்றவர்கள், தங்களை எதிர்த்து நின்றவர்கள பழி வாங்குவதாக புகார் எழுந்திருக்கு. பணிமனைகளில் அலுவலர்கள் பற்றாக்குறை இருக்கறதால, டிராபிக் கன்ட்ரோல் (டி.சி) பணியை டிரைவர், கண்டக்டர்களே செய்யறாங்க. தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டதால, தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கே விருப்பம் கோரும் பஸ்சை இயக்க அனுமதிக்காமல், ஒதுக்கீடு செய்யப்பட்ட பஸ்சில் இருந்து இறக்கி விடுறாங்க. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுறாங்க. தொ.மு.ச., வில் உட்கட்சி பூசல் நிலவுவதால் பிற கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள், அதனை ரசித்து வேடிக்கை பார்க்கறாங்கனு சொன்னாங்க.

'டூர்' வர்றவங்க சிரமப்படுறத கண்டுக்காத வனத்துறை

வால்பாறைக்கு ரொம்ப ஆர்வமா வர்ற சுற்றுலா பயணியருக்கு வனத்துறை அதிகாரிகள் எந்த அடிப்படை வசதியும் செய்து தருவதில்லைனு, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்கள் பேசியதில் இருந்து... வால்பாறையில் கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுலா பயணியர் அதிகம் வர்றாங்க. இங்க இருக்கற இயற்கை அழகு சூழ்ந்த டீ எஸ்டேட்கள், மலைத்தொடர், அருவி, வனவிலங்குகள கண்டு ரசிக்கறாங்க. ஆனா, சுற்றுலா பயணியர் வசதிக்காக வனத்துறை சார்பில் பல்வேறு டூரிஸ்ட் ஸ்பாட்கள் அமைச்சிருக்காங்க. குறிப்பா, கவர்க்கல் வியூ பாயின்ட், சின்னக்கல்லாறு, நல்லமுடி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணியர் காண, வனத்துறை சார்பில், 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கறாங்க. அந்தப்பகுதியில் சிறுநீர் கழிக்கவோ, வாகனங்கள் நிறுத்தவோ எந்த வித வசதியும் இல்லை. நல்லமுடி காட்சி முனைக்கு செல்ல ரோடு வசதி கூட இல்லை. பணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் வனத்துறை அதிகாரிக, சுற்றுலா பயணியருக்கு அடிப்படை வசதிகள செய்து தருவதில்லை. இதனால, வால்பாறைக்கு 'டூர்' வர்றவங்க சிரமப்படுறாங்கனு, பேசிக்கிட்டாங்க.

வேலை முடிஞ்சு வருஷமாச்சு; பணம் பட்டுவாடா என்னாச்சு

கிணத்துக்கடவுல இருந்து, கோவையில் உள்ள நபரை சந்திக்க, பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போ, அரசு கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரர் ஒருவர் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து வந்தார். வேலையெல்லாம் எப்படி போகுதுனு பேச்சு கொடுத்தேன். அது எங்கெங்கே போகுது, வெளியில நிறைய கடன் வாங்கி வட்டி கட்ட முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம் அப்படினு சொன்னாரு. என்னாச்சுன்னு கேட்டதுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதி திட்டத்துல, ஒப்பந்ததாரர்கள் நிறையா கட்டட வேலை செஞ்சாங்க. இதுல ஒரு சிலர் தங்களோட கை காசு எல்லாம் போட்டு வேலைய முடிச்சு கொடுத்தாங்க. ஆனா, ஒரு வருஷமாகியும் இன்னும் பணம் வரல. அதிகாரிங்க கிட்ட கேட்டா வரும்னு சொல்றாங்க, எப்ப வரும்னு தெரியல. கோவை மாவட்டத்துல இருக்கற, 90 சதவீத ஒப்பந்ததாரர்களுக்கு இதே நிலை தான். இதனால பலர் கடனை கட்ட முடியாம தவிக்கிறாங்க. ரொம்ப மன உளைச்சலில் இருக்கோம். ஒன்றிய அதிகாரிகள் மனசு வச்சு, நாங்க செலவு பண்ணின பணத்தை எப்படியாவது செட்டில் பண்ணினா நிம்மதியா இருப்போம்னு, சொன்னார்.

தி.மு.க.,வுல நடக்குது கூத்து; பஞ்ச் கொடுக்கும் பா.ஜ.,

உடுமலை தி.மு.க.,வுல நடக்கற கூத்து உங்களுக்கு தெரியுமா என்ற கேள்வியுடன், அக்கட்சி நண்பர் பேச்சை துவங்கினார். என்ன நடந்ததுனு கேட்டேன். தி.மு.க., திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் நிர்வாகிகள், உடுமலையில முக்கிய பிரமுகர்கள சந்திக்கறாங்க. அதுல, பா.ஜ.,வை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்களை கட்சியில் சேர்த்ததாக, பல போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டாங்க. அதில் ஒருவரான, பா.ஜ., மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பாலசுந்தரம், 'நான் தி.மு.க.,வில் சேர வில்லை. அவங்க, மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தனர்,' என அதே சமூக வலைதளங்களில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டாரு. இதனால, உடுமலை, மடத்துக்குளம் பகுதி தி.மு.க.,மற்றும் பா.ஜ., கட்சிகளுக்குள் பரபரப்பு ஏற்பட்டிருக்கு. தி.மு.க.,வினர் மத்தியில், எதற்கு கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களை தேடி சென்று, கட்சியில் சேர்த்ததா சமூக வலைதளத்தில் பதிவிடணும், என, அதிருப்தி ஏற்பட்டிருக்கு. இதைக்கண்ட பா.ஜ.,வினர், தி.மு.க.,வை வளர்க்க எங்கள் ஆட்களை தேடிச்சென்று சந்தித்து, கட்சியில் சேர்ந்ததா விளம்பரம் பண்ணுறாங்கனு, பஞ்ச் கொடுக்கறாங்க. கட்சி தலைமையே ஏமாற்ற நிர்வாகிக பண்ணுற லுாட்டி தாங்க முடியலைனு, புலம்பினார்.

பட்டா மாறுதல், அடங்கலுக்கு 'காணிக்கை' கட்டாயம்

உடுமலை தாலுகா ஆபீஸ்ல, விவசாயிகள் இருவர் ஆவேசமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன நடந்ததுணு விசாரிச்சேன். பட்டா மாறுதலை எளிதாக்க, அரசு பல்வேறு திட்டங்கள செயல்படுத்தினாலும், வருவாய்த்துறையினர் அசைந்து கொடுக்காததால், எவ்வித பலனும் கிடைப்பதில்ல. ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்தால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்பதால், கடைசி தேதி வரை, எவ்வித தகவலும் தெரிவிப்பதில்ல. இதனால அச்சப்படும் மக்கள், வருவாய்த்துறை, நில அளவைத்துறை அதிகாரிகள அணுகினால், அவங்க முறையாக பதில் தெரிவிக்காமல் இழுத்தடிக்கிறாங்க. வேறு வழியில்லாம, அதிகாரிகள நேரடியாக சந்தித்து 'கவனிப்பு' செய்தால் மட்டுமே பட்டா மாறுதல் நடக்குது. பெதப்பம்பட்டி வருவாய் உள்வட்டத்தில், இத்தகைய புகார்கள் அதிகமா இருக்குது. திருப்பூர் கலெக்டர் வரை, பாதிக்கப்பட்டவங்க புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்ல. இதே போல், விளைநிலங்களுக்கான அடங்கல் சான்று வழங்கவும், ரெகுலராக 'கவனிப்பு' செய்ய வேண்டியிருக்கு. இ-அடங்கல் திட்டத்தை அரசு கொண்டு வந்தாலும், அது முழுசா பயன்பாட்டுக்கு வரல. வங்கி கடன், மானிய திட்டங்களுக்கு ஒவ்வொரு முறை அடங்கல் சான்று வாங்கவும், வி.ஏ.ஓ., ஆபீஸ்ல 'காணிக்கை' செலுத்த வேண்டியிருக்கு. இதனால, மானியமே வேண்டாம் என்ற நிலையில பரிதவிக்கிறோம். இந்த பிரச்னைய கண்டித்து கிராமம் வாரியா போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கோம். இதனால, ஆளும்கட்சிக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும்னு கட்சிக்காரங்க கிட்டவும் புகார் பண்ணியிருக்கோம். ஆனாலும், பலனில்லைனு, சொன்னாங்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி