| ADDED : நவ 26, 2025 05:38 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு -- திருப்பூர் இடையே பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கிணத்துக்கடவில் இருந்து கொரோனாவுக்கு முன், திருப்பூருக்கு பஸ் இயக்கப்பட்டது. அதன்பின் பஸ் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், கிணத்துக்கடவு சுற்று வட்டாரப்பகுதி மக்கள், பொள்ளாச்சி அல்லது கோவை சென்று திருப்பூர் செல்லும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, கிணத்துக்கடவில் இருந்து தினம்தோறும் ஏராளமான மக்கள் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல, பொள்ளாச்சி அல்லது கோவை சென்று அங்கிருந்து மாற்று பேருந்தில் பயணம் செய்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி திருப்பூரில் இருந்து காட்டம்பட்டி, வடசித்தூர் வழியாக கிணத்துக்கடவுக்கு பஸ் இயக்கினால், காட்டம்பட்டி, மன்றாம்பாளையம், வடசித்தூர், குருநல்லிபாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன் பெறுவர். அதனால், பஸ் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.