வருவாய்த்துறை சான்று வழங்காமல் நிறுத்தக்கூடாது: மீறினால் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை
கோவை, : கோவை கலெக்டர் அலுவலகத்தில், வருவாய்த்துறை பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா முன்னிலை வகித்தார்.இதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:கோவை புறநகர் பகுதிகளில், வருவாய்த்துறையால் வழங்கப்படும் தனிப்பட்டா (நாட் இன்வால்விங் சப்டிவிசன்- என்.ஐ.எஸ்.டி.) 15 நாட்களுக்குள்ளும், கூட்டுப்பட்டா (இன்வால்விங் சப்டிவிசன் - ஐ.எஸ்.டி.) 30 நாட்களுக்குள்ளும், வருவாய்த்துறை சான்றுகள் அனைத்தும் 15 நாட்களுக்குள்ளும் வழங்க வேண்டும்,சான்று வழங்காமல் ரத்து செய்தாலும், நிலுவையில் வைத்தாலும் அதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வருவாய்த்துறை பணிகள் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு பணிகளை விரைந்து, நிறைவு செய்து கொடுக்க வேண்டும்.வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும், அத்தனை சான்றுகளும் ஆன்லைன் முறையில் வழங்கப்படுகின்றன. ஆனால் காலதாமதம் ஏற்படுவதாக, தகவல்கள் வருகின்றன. அதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.புதியதாக பட்டா வழங்குவதற்கான இடங்கள் குறித்த விபரம், முழுமையாக ஆன்லைனில் 'அப்டேட்' செய்ய, தயார் நிலையில் இருக்க வேண்டும்.நகரில் பட்டாவுக்கு பதிலாக டி.எஸ்.எல்.ஆர். (டவுன் சர்வே லேன்ட் ரெக்கார்ட்) பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி, வார்டு வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதனால் சில வார்டுகளில், டி.எஸ்.எல்.ஆர்.,மாறுதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இது தவிர, உயர்கல்வி தொடருவதற்காக மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கக்கூடாது.இவ்வாறூ, கலெக்டர் பேசினார். கோவை கலெக்டர் அலுவலக அதிகாரிகள், 11 தாலுகா தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.