உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி; சாலையோர வியாபாரிகள் ஆதங்கம்

 அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி; சாலையோர வியாபாரிகள் ஆதங்கம்

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம், பல்வேறு குளறுபடியுடன் நடந்து வருகிறது' என, வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெரு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சாலையோரங்களில் தள்ளுவண்டிகள் உதவியுடனும், தரையில் கடை விரித்தும், காய்கறி, பழங்கள் உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாலை நேரங்களில் சில்லி சிக்கன் உள்ளிட்ட 'பாஸ்ட் புட்' தயாரித்து வழங்கும் கடைகளும் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, கொரோனா சமயத்தில் வேலையிழப்பு ஏற்பட்ட சூழலில், தள்ளுவண்டி வாயிலாகவும், சாலையோரங்களிலும் கடை அமைத்த பலர் உண்டு. இந்நிலையில், சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் நோக்கிலும், சாலையோர கடைகளை மட்டுமே, தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ள வியாபாரிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும், மத்திய அரசு சாலையோர வியாபாரிகளுக்கு, அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி, தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், விதிமுறைக்கு உட்பட்டும், சாலையோர கடைகளை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட சாலையோர வியாபாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. அடையாள அட்டை பெற்ற சாலையோர வியாபாரிகளுக்கு, சுழற்சி நிதியாக வங்கிக்கடனும் வழங்கப்பட்டது. சாலையோர வியாபாரிகள் சிலர் கூறியதாவது: கொரோனா காலக்கட்டத்தில் சாலையோரம் வியாபாரம் செய்த பலர், தற்போது மாற்றுத்தொழிலை தேர்ந்தெடுத்து சென்றுவிட்டனர்; சிலர் வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டனர். தற்போது, உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டையில், ஊரில் இல்லாதவர்கள், வியாபாரத்தை கைவிட்டவர்களின் பெயரில் கூட அடையாள அட்டை இருப்பதாக தெரிகிறது. அதே நேரம், பல ஆண்டுகளாக மாலை நேரங்களில் தள்ளுவண்டிக் கடை வாயிலாக வியாபாரம் செய்வோர் விடுபட்டுள்ளனர்; அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதுகுறித்து, அதிகாரிகளிடம் காரணம் கேட்கும் போது, பகல் நேரங்களில் மட்டுமே கணக்கெடுப்பு பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருப்பது, தெரிய வந்திருக்கிறது. ஆனால், மாலை நேரங்களில் தான் அதிகம் பேர் சாலையோர வியாபாரத்தில் ஈடுபடும் நிலையில், இதுபோன்ற குழப்பங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -: '


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ